திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் சரவணனுக்கு வாக்கு சேகரிக்க 'கந்தசாமி' வேடத்தில் ஒருவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
சுசி.கணேசன் இயக்கத்தில், விக்ரம் நடித்த 'கந்தசாமி' படம் (2009) நினைவிருக்கிறதா? முருகனின் வாகனமான சேவல் வேடம் போட்டுக்கொண்டு எதிரிகளைப் பந்தாடுவார் விக்ரம். தலையில் கொண்டை, உடலில் சேவல் இறகு, சேவல் முகம் போன்ற மாஸ்க் அணிந்து கொண்டு, “கொக்... கொக்... கொக்... கொக்கரக்கோ... கோ” என்று கூவிக்கொண்டு விக்ரம் வரும் காட்சி விநோதமாக இருக்கும். இப்படத்தில், வடிவேலும் அதே போன்ற வேடமணிந்து தோன்றி, ரசிகர்களைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்தார்.
தற்போது ஒரு ஆசாமி, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் இதே வேடத்தில் வலம் வருகிறார். அதுவும் பகுத்தறிவு இயக்கமான திமுகவின் பிரச்சார வாகனத்தின் மீது நின்றபடி. அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு வாக்கு சேகரிக்கவே இந்த வேடமாம். இதில் வேடிக்கை என்னவென்றால், சில நேரங்களில் வேட்பாளர் வருவதற்கு தாமதமாகிவிடுகிறது. எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி முடிக்கிற ‘கந்தசாமி’, ‘கருத்து கந்தசாமி’யாக மாறி கொடுத்ததற்கு மேலாக கூவுகிற சூழல் ஏற்படும் போது, செம காமெடியாக இருக்கிறது.
சேவல் வேடமிட்டு ஓட்டுக்கேட்டால் வெற்றிபெற்றுவிடலாம் என்று இவர்களுக்கு யார் ஐடியா கொடுத்திருப்பார்கள் என்ற யோசனையுடன் திமுகவினரிடம் பேச்சுகொடுத்தோம். ''இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முக்கியத் தலைவர்கள் அதிகம் வரவில்லை. இதனால் கூட்டம் கூட்டுவது சிரமமாக இருக்கிறது. வேட்பாளர் சரவணன் சினிமாத்துறையைச் சேர்ந்தவர் என்பதால், வித்தியாசமாகச் சிந்தித்தார். அவர் பிரச்சாரத்திற்கு வரும் ஒவ்வொரு இடத்திலும் அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த ‘கந்தசாமி’ ஆஜராகிவிடுவார். இவர் பண்ணுகிற சேட்டைகளைப் பார்ப்பதற்காக கூட்டம் கூடியதும், அங்கு வந்து கும்பிடு போட்டு வேட்பாளர் ஓட்டு கேட்பார். கந்தசாமி மட்டுமல்ல, ரஜினி போல ஒருவர், நடிகர் வடிவேலு போல ஒருவர் என்று வேறு சிலரும் வேடமிட்டு இதேபோல கூட்டம் கூட்டுகிறார்கள்'' என்றனர்.
"என்னது திமுக வேட்பாளர் சரவணன் சினிமாத்துறையைச் சேர்ந்தவரா?" என்று கேட்பவர்களுக்காக சிறு அறிமுகம். டாக்டராக இருந்தாலும், ‘சைடு பை சைடாக’ சினிமாவிலும் நடித்தவர் சரவணன். தனது முதல்படமான, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ வெளியாகும் முன்பே, ஜே.கே.ரித்தீஷ் போல ரசிகர் மன்றம் தொடங்கி மதுரையில் கலகலப்பூட்டியவர். அடுத்து, தன் பெயரில் ஒரு லோக்கல் சேனல் தொடங்கி, சீரியலிலும் நடித்தார். பிறகு சொந்தத் தயாரிப்பில் ‘அகிலன்’ படத்திலும் நடித்தார் சரவணன், அப்படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு பிரியாணியும், இலவச டிக்கெட்டும் வழங்கிய கொடுமையும் நடந்தேறியது.
'லிம்கா' சாதனை முயற்சியாக 10 மணி நேரத்தில் ஒரு படத்தை எடுத்து முடிக்க டாக்டர் சரவணன் திட்டமிட்டிருந்தார். தற்போது ‘பேய்’ பட சீசன் என்பதால், தன்னுடைய படத்திற்கு ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று பெயரிட்டிருந்தார். 21.10.16 அன்று படப்பிடிப்பு நடத்தத்திட்டமிட்டு, மதுரை முழுக்க போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். ஆனால், அதற்குள் அவர் வேட்பாளராகிவிட்டதால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
ஆர்வக்கோளாறில் வேட்பாளரே வேடமிட்டுக் களமிறங்கமாமல் இருந்தால் சரி!