தமிழகம்

ராணுவ பாதுகாப்புடன் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி: புதுச்சேரி அமைச்சர்கள் சீருடையுடன் பங்கேற்பு

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் பேரணிநடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தில் அணிவகுப்பு பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில்அனுமதி கோரப்பட்டது. சட்டம் -ஒழுங்கு பாதுகாப்பு காரணங்களைகாட்டி இப்பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில், புதுச்சேரியில் நேற்று (அக்.2) அணிவகுப்பு பேரணியை நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி அளித்தது. அதன்படி நேற்று மாலை புதுச்சேரி பாலாஜி திரையரங்கம் அருகில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கியது.

இதில், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்பி, எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், பாஜக மாநிலதலைவர் சாமிநாதன் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர். இப்பேரணி காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்ஸி வீதி,மறைமலையடிகள் சாலை வழியாக கடலூர் சாலையை அடைந்து சிங்காரவேலர் சிலை அருகே நிறைவடைந்தது. முக்கிய சந்திப்புகளில் பாஜகமகளிரணியினர் பூக்கள் தூவி வரவேற்றனர். மாலை 4 மணிக்குதொடங்கிய பேரணி மாலை 5மணிக்கு சுதேசி மில் வளாகத்தை அடைந்தது. பேரணி சென்ற முக்கிய சந்திப்புகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர்.

தொடர்ந்து நேற்றிரவு சுதேசி மில் வளாகத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ஆர்எஸ்எஸ் மாநிலஇணைச் செயலர் ராஜசேகர் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் சீனிவாசன், கோட்டத் தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறுகையில், “சங்கம் தொடங்கப்பட்ட விஜயதசமியையொட்டி நாடு முழுவதும் சீருடை அணிவகுப்பை ஆர்எஸ்எஸ் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. எங்கள் பேரணியால் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை, ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தை விதைத்துள்ளோம். நமது நாட்டின் சுதந்திரத்துக்காக ஏராளமானோர் பெரும் தியாகம் செய்துள்ளார்கள். அவர்களது வீரம், தியாகத்தை போற்றியும் இப்பேரணி நடந்தது” என்றனர்.

SCROLL FOR NEXT