தருமபுரி: காலாண்டு விடுமுறையை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நேற்று சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த இரு மாதத்துக்கு முன்னர் தீவிரமடைந்த பருவமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டது.
இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இத்தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. பரிசல் இயக்கத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளிகளில் காலாண்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளதாலும், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதாலும், நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டாலும், பரிசலில் சென்று காவிரியின் அழகை கண்டு மகிழ்ந்தனர்.பயணிகள் வருகை அதிகரிப்பால் பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீர்வரத்து அதிகரிப்பு: ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.