சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மூத்த தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானர். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்திகள் வருமாறு:
முதல்வர் மு.க.ஸ்டாலின்: கொள்கை உறுதிமிக்க தலைவராக விளங்கிய கொடியேறி பாலகிருஷ்ணன் 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலையின் போது மிசா சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்தவர்.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கேரளத்து மக்களின் நலன் காக்கவும், நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்களின் நலன் காக்கவும், வர்க்கப் போராட்டத்தின் முன்னணி தளபதிகளில் ஒருவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தியவர் கொடியேறி பாலகிருஷ்ணன். அவரது மறைவு இடதுசாரி இயக்கத்துக்கும், முற்போக்குசக்திகளுக்கும் பேரிழப்பாகும்.
கொடியேறி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி கட்சி நிகழ்ச்சிகளை மூன்று நாட்களுக்கு ரத்துசெய்து கட்சி கொடியை அரைக்கம்பத்திற்கு பறக்கவிட்டு இரங்கல் அனுஷ்டிக்க வேண்டும் என கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.