கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே காட்டுநெமிலி கிராமசபைக் கூட்டத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்துப் பெற்ற தாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுநெமிலி கிராமத்தில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சிமன்றத் தலை வர் தண்டபாணி பங்கேற்வில்லை. இதையடுத்து துணைத்தலைவர் காத்தவராயன் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்புகளின் குறைபாடுகளை மக்கள் சுட்டிக்காட்டினர். ஊராட்சியில் உள்ள ஆழ்குழாய் குடிநீர் கிணறுகளில் உள்ள மோட்டார்கள் என்னவானது? என கேள்வி எழுப்பினர். இதேபோல், விசைப் பம்பு ஏன் செயல்படவில்லை? சுடுகாட்டுக்கான பாதை அமைக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அவற்றுக்கு ஊராட்சி செயலர் சரிவர பதிலளிக்கதாதால், அவரை மாற்றக் கோரி தீர்மானம் வைக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் அனைவருக்கும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
இதையடுத்து தீர்மான குறிப்பேட்டில் பங்கேற்றவர்களிடம் கையெழுத்து கோரப்பட்டது. அப்போது, குறிப்பேட்டில் எதுவும் எழுதாமல் எவ்வாறு கையெழுத்திடுவது என மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவசங்கரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலரும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.