ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் கிளைச் சிறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான பாலம் உள்ளது. நகரின் பிரதான பகுதியில் உள்ள இப்பாலத்தின் வழியே 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வானங்கள் செல்கின்றன.
கடந்த ஆண்டு பாலத்தை அகலப்படுத்துவதற்காக தடுப்புச்சுவரின் ஒரு பகுதி அகற்றப்பட்டு பணிகள் நடந்தன. பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்டு இரு மாதங்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைக்கும் பாலத்துக்கும் இடையே இடைவெளி உள்ளது.
இந்நிலையில் பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந் துள்ளதால் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. இதேபோல் பாலம் சேதமடைந்து பல இடங்களில் கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. விபத்து ஏற்படும் முன்பு பாலத்தைச் சீரமைத்து தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.