முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் முத்தலாக் பிரச்சினையை பொது சிவில் சட்ட விவாதமாக திசை திருப்ப முயற்சிகள் நடப்பதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினரான இல.கணேசன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்காக டெல்லி செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இஸ்லாமிய மார்க்கத்தில் மனை வியை விவாகரத்து செய்ய தலாக் என்ற வழிமுறை உள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 முறை தலாக் சொன்னால் விவாகரத்து கிடைத்துவிடும். ஆனால், இஸ்லாமிய மார்க்கத்தின் படி குறிப்பிட்ட கால இடைவெளியில் தலாக் சொல்லாமல் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் சொல்லி விவகாரத்து செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முத்தலாக் பிரச்சினையால் ஏராளமான முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதைத் தான் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு முஸ்லிம் பெண்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.
முஸ்லிம் பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முத்தலாக்கை முஸ்லிம் சமுதாயத் தலைவர்களே எதிர்க்க வேண்டும். ஆனால், முஸ்லிம் அமைப்புகளும், பெண்ணுரிமை பேசும் அமைப்புகளும் இந்த முத்தலாக் பிரச்சினையை பொது சிவில் சட்ட விவாதமாக வேண்டுமென்றே திசை திருப்புகின்றனர். பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து சிறுபான்மையினரை நசுக்கப் பார்ப்பதாக பாஜக அரசு மீது குற்றம்சாட்டுகின்றனர்.
முத்தலாக், பொது சிவில் சட்டம் இரண்டும் வெவ்வேறு பிரச்சினைகள். பெண்ணுரிமை பேசுபவர்கள் முஸ்லிம் பெண்களைப் பாதிக்கும் முத்தலாக் பற்றி பேசுவதே இல்லை. அதனை மறைக்கவே முயற்சிக்கிறார்கள். இதை மக்கள் நன்கறிவார்கள்.
இவ்வாறு இல.கணேசன் கூறினார்.