பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் பத்திரப் பதிவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என பதிவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இ-ஸ்டாம்பிங் பயன்படுத்தி பலரும் பத்திரப் பதிவு செய்து வருவதாக அவர் கூறினார்.
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும், அங்கீ காரம் இல்லாத நிலம் மற்றும் கட்டிடங்களைப் பதிவு செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உயர் நீதிமன்ற தடையை நீக்கக் கோரி, ரியல் எஸ்டேட் துறையினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது, தமிழக அரசு சார்பில் நிலம் வகைப்படுத்துதல் தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
இதற்கிடையே, உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த சட்டத் திருத்தம் 22ஏ-வின் படி, விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றக் கூடாது. அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் பதிவு செய்வது தடை செய்யப்படுகிறது என்பது தொடர்பான சுற்றறிக்கை, தமிழக பதிவுத்துறை தலைவர் அலுவல கத்தில் இருந்து தமிழகம் முழு வதும் உள்ள பத்திரப்பதிவு அலு வலகங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஆனாலும், இதைப் பின்பற்ற பல சார்பதிவாளர்கள் மறுத்துவருவதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சட்டத் திருத்தத்தின் படியான அறிவுறுத்தல்கள் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அந்தந்த பகுதி இணைப் பதிவாளர்கள், சார்-பதிவாளர் களுக்கு அறிவுறுத்தும்படியும் கூறப்பட்டுள்ளது. நிலத்தின் தன்மை, வகைப்பாடு, தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு செய்யும்படி உத்தரவிட்டுள்ளோம். சந்தேகங் கள் இருந்தால், உயர் அதிகாரி களிடம் விளக்கம்கோரும் படியும் கூறியுள்ளோம். நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் முடிவு எட்டப் பட்டால், நிலைமை சரியாகிவிடும். பத்திரப்பதிவின் அளவும் அதிகரிக்கும். தற்போது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டாலும், அதனால் பத்திரப்பதிவில் எந்த பாதிப்பும் இல்லை. இ-ஸ்டாம்பிங் பயன்படுத்தி பலர் பதிவு செய்து வருகின்றனர்’’ என்றார்.