தமிழகம்

பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் மு.க.ஸ்டாலின் கார் விபத்தில் சிக்கியது

செய்திப்பிரிவு

பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் ஸ்டாலின் பயணித்த கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து, போலீஸார் கூறும்போது, ‘‘தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரிக்கு நேற்று மாலை காரில் சென்றார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச் சாவடியை நேற்று இரவு 8.30 மணியளவில் கடக்க முயன்றார்.

அப்போது, ஸ்டாலின் வாகனத்துக்கு முன் கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கார் திடீரென குறுக்கே புகுந்தது. இதில் அந்த காரின் பின்பக்கத்தில் ஸ்டாலின் பயணித்த கார் மோதியது. இதில், 2 கார்களும் லேசாக சேதமடைந்தன. காரின் முன்பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்டாலினுக்கு அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை. மேலும், ஸ்டாலின் காரை பின் தொடர்ந்து வந்த 2 கார்களும் லேசாக சேதமடைந்தன.

இதையடுத்து, வேலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்திக்குச் சொந்தமான காரில் ஸ்டாலின் தருமபுரி நோக்கி பயணமானார்.

திடீர் விபத்தால் வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே விபத்துக்குள்ளான காரை பழுது நீக்க அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக விபத்துக்குள்ளான காரின் உரிமையாளர் புகார் ஏதும் கொடுக்க விரும்பாததால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்’’ என்றனர்.

SCROLL FOR NEXT