தமிழகம்

ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு இல்லை: சுந்தரனார் பல்கலை. துணைவேந்தர் உறுதி

செய்திப்பிரிவு

''திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி நியமனங்களில் முறைகேடுகள் நடைபெறவில்லை'' என்று, துணைவேந்தர் கே.பாஸ்கர் தெரிவித்தார்.

திருநெல்வேலியில் செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 54 உதவி பேராசிரியர், பேராசி ரியர் பணியிடங்களை நிரப்பும் பணியில், இதுவரை 27 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க இரு துணைவேந்தர்கள், ஒரு முன்னாள் துணைவேந்தர், வெளிமாநில பல்கலைக்கழக பேராசிரியர்கள் என 9 நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் தேர்வு

வெளிநாடுகளில், வெளி மாநிலங் களில் பணியாற்றி அனுபவம்மிக்க, ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட தகுதி வாய்ந்தவர்களே தேர்வு செய்யப்பட்டு ள்ளனர். பணி நியமனத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. வெளிப்படைத் தன்மையுடன் நியமனங்கள் நடைபெற்றுள்ளன.

ஊதியம் உயர்வு

விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணித்திருக்கும் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் ஊதியத்தை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணியை சிறப்பாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வசதியாக அந்தந்த கல்லூரிகளிலேயே ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் வகையில் பரவலாக்கப்பட்ட விடைத்தாள் திருத்தும் திட்டம் செயல்படுத்தப்படும். அதன்படி ஒரு கல்லூரியிலுள்ள விடைத்தாள்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கி மற்ற கல்லூரிகளுக்கு அனுப்பி திருத்துவதற்கும், அதை அந்தந்த கல்லூரி முதல்வர்கள் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளர்ச்சியானது அதன் வருமானத்தை பொருத்தே அமைகிறது. அந்த வகையில்தான் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதத்தில் நடைபெறும்.

புதிய கட்டிடங்கள்

பல்கலைக்கழக துணைவேந்தருக் கான உறைவிடம் ரூ.74 லட்சத்திலும், பதிவாளர் உறைவிடம் ரூ.60 லட்சத்திலும், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ரூ.1.50 கோடியிலும், மாணவர் விடுதி ரூ.5.65 கோடியிலும், மாணவியர் விடுதி ரூ.1.85 கோடியிலும், ஒருங்கிணைந்த கட்டிட வளாகம் ரூ.5.90 கோடியிலும், ஞானவாணி வானொலிக்கான கட்டிடம் ரூ.75 லட்சத்திலும், பல்கலைக்கழக சுற்றுச்சுவர் ரூ.75 லட்சத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்திலுள்ள பல்கலைக்கழக மையத்தில் மாணவியர் விடுதி ரூ.75 லட்சத்திலும் கட்ட ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கும்.

சங்கரன்கோவில், புளியங்குடி, பணகுடி, திசையன்விளை ஆகிய இடங்களில் செயல்படும் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு தலா ரூ.1 கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. பட்டயப் படிப்புகள்

பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே இளங்கலை மற்றும் முதுகலை இணைந்த ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்புகள் இயற்பியல், வேதியியல், கணிதம், சுற்றுச்சூழல் அறிவியல் துறைகளில் தொடங்கப்பட்டுள்ளன.

வரும் கல்வியாண்டில் இருந்து பயோடெக்னாலஜி, வணிகவியல், உயிர் அறிவியல் ஆகிய பாடங்களிலும் ஒருங்கிணைந்த பட்டமேற்படிப்புகள் தொடங்கப்படும். மேலும், தொழில்திறன் மேம்பாட்டுக்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளும் தொடங்கப்படவுள்ளன.

விளையாட்டுத் திடல்

பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் ஒருங்கிணைந்த விளையாட்டு திடல் அமைக்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய விளையாட்டுத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதுபோல் 5 ஏக்கரில் ரூ.6 கோடி மதிப்பில் நீச்சல்குளம் அமைக்க மாநில அரசிடம் ஒப்புதல் கேட்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதத்தில் பல்கலைக்கழகம் சார்பில் தேசிய அளவிலான கபடி போட்டிகள் நடத்தப்படவுள்ளன என்றார் துணை வேந்தர். பல்கலைக்கழக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ உடனிருந்தார்.

மாணவர்களுக்கு காப்பீடு!

பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கு மருத்துவ காப்பீடு செய்யும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் பேசப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் 24 மணிநேரமும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும்.

இப் பல்கலைக்கழகம் தற்போது தேசிய தரமதிப்பீட்டில் ‘பி’ கிரேடு பெற்றுள்ளது. ‘ஏ’ கிரேடு தரத்தை பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிகளின்படி பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளன. இதுபோல் ஆராய்ச்சிகளுக்கும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று துணைவேந்தர் கே.பாஸ்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT