தமிழகம்

அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றம்

செய்திப்பிரிவு

சுனாமி நிவாரண திட்டம் திமுக ஆட்சியில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற அமைச்சர் உதயகுமார் புகாரை கண்டித்து அமளியில் ஈடுபட்ட திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

திமுகவினர் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சியினரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் சில பகுதிகளில் நிலவும் வறட்சி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பதிலுரை வாசித்த போது அமைச்சர் உதயகுமார் பேசியதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திமுக உறுப்பினர் மு.க.ஸ்டாலின்: "தமிழகத்தில் நிலவும் வறட்சி குறித்த கவன் ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக திமுக சார்பில் ஏ.வா.வேலு உரையாற்றினார். அவரை தொடர்ந்து பேச விடாமல் சபாநாயகர் தடுத்துவிட்டார். அதை நாங்கள் பொறுத்துக் கொண்டோம்.

பின்னர், அமைச்சர் தாக்கல் செய்திருந்த விவர அறிக்கையில், மேட்டூர் அணை நீர்மட்டம் அளவு மில்லியன் கன அடி என்பதற்கு பதிலாக, கன அடி என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை, எங்கள் உறுப்பினர் துரைமுருகன் சுட்டிக்காட்டினார். ஆனாலும், அமைச்சர் தனது பதிலுரையில் திருத்தம் செய்யவில்லை. தொடர்ந்து கன அடி என்றே வாசித்தார்.

அப்போது மீண்டும் துரை முருகன் அதனை சுட்டிக்காட்டினார். அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அமைச்சர் உதயகுமார் வறட்சி தொடர்பாக பேசாமல் சம்பந்தமே இல்லாமல், சுனாமி ஏற்பட்ட போது திமுக ஓடி ஒழிந்துவிட்டது என்றார். சுனாமி நிவாரண திட்டம் திமுக ஆட்சியில் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் கூறினார்.

கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு சம்பந்தமில்லாமல் அமைச்சர் பேசியதை கண்டித்து நாங்கள் குரல் எழுப்பினோம். அதற்காக அவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம். சர்வாதிகாரி போல் தொடர்ந்து செயல்படும் அவைத்தலைவர் தனபாலை திமுக வன்மையாக கண்டிக்கிறது" என கூறினார்.

SCROLL FOR NEXT