சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம் 
தமிழகம்

ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்த திருமாவளவன் வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமாவளவன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மத நல்லிணக்கம், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை சம்பந்தப்பட்டுள்ளதால் மறு ஆய்வு கோர உரிமை உள்ளதாக வாதிட்டார்.

மேலும், “பேரணிக்கு அனுமதி கோரியது என்பது உரிமையியல் பிரச்சினை. அதை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க வேண்டும். மாறாக, குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

காவல் கண்காணிப்பாளரையோ, காவல் ஆணையரையோ எதிர்மனுதாரராக சேர்ப்பதால் மட்டும் உரிமையியல் வழக்கை, குற்றவியல் வழக்காக கருத முடியாது" என்று வாதிட்டார். இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT