பென்னாகரம் அருகே நாகர்கூடல் ஊராட்சியில் ரசாயனம் கலந்த கள் விற்பனையை தடுக்க வேண்டுமென அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள நாகர்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பைக்கொட்டாய் பகுதியில், அரசு தடையை மீறி தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது.
கள்ளில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவதால் அப்பகுதியைச் சேர்ந்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருவதாகவும், இதை தடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, நாகர்கூடல் ஊராட்சியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கூறியது:
நாகர்கூடல் ஊராட்சி கோம்பைக்கொட்டாய் பகுதியில் ஓரிடத்தில் 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது. நாகர்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் வெளியூரைச் சேர்ந்தவர்களும் கள் பருக வந்து செல்கின்றனர்.
இங்கு விற்பனை செய்யப்படும் கள்ளில் ரசாயன பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கள்ளை தொடர்ந்து ஒரு வாரம் வரை பருகும் ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு கடும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனால், ஆண்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக் கின்றனர்.
எனவே, தேவையற்ற மருத்துவச் செலவுகள் ஏற்படுவதுடன், வீட்டின் வருமானமும் பாதிப்படைகிறது. மேலும், இதைச்சார்ந்து தம்பதியரிடையே அவசியமற்ற தகராறுகள் ஏற்பட்டு வீட்டிலுள்ள குழந்தைகளின் மனநலமும், படிப்பும் பாதிப்படைகிறது.
எனவே, நாகர்கூடல் ஊராட்சி பகுதியில் நடைபெறும் ரசாயனம் கலந்த கள் விற்பனையை முழுமையாக தடை செய்து எங்களின் வேதனையை போக்கிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.