சென்னை: சென்னை கோயம்பேட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை இன்று தொடங்குகிறது. கோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுதபூஜை ஆகிய விழாக் காலங்களில், பண்டிகைகளுக்குத் தேவையான பூஜை பொருட்களை மலிவு விலையில் ஒரே இடத்தில் வாங்கச் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஆயுதபூஜையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில், மலர் சந்தை வளாகத்தின் வெளிப் பகுதியில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை இன்று (செப். 30) திறக்கப்படுகிறது.
இந்த சந்தையில் பொரி, கடலை, வாழைப்பழம், வாழைக் கன்று, வாழை இலை, கரும்பு,ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பழவகைகள், மல்லி, ரோஜா, முல்லை, சாமந்திஉள்ளிட்ட மலர் வகைகள், மலர் மாலைகள்உள்ளிட்டவை மலிவு விலையில், மொத்தவிலையிலும், சில்லறை விலையிலும் விற்கப்பட உள்ளன. இந்த சந்தை வரும் அக்.9-ம் தேதி வரை செயல்படும் என கோயம்பேடு சந்தைநிர்வாகம் தெரிவித்துள்ளது. மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், திருட்டைத் தடுக்கவும் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்கவும் காவல் துறைக்குச் சந்தை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.