செங்கல்பட்டு/காஞ்சிபுரம்: செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கத்துடன் தீக்காய சிகிச்சை பிரிவை உடனடியாக உருவாக்க சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், தேவரியம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான சிலிண்டர் கிடங்கு வெடித்து விபத்துக்குள்ளாகி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 12 பேர் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 7 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேரை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். தொடர்ந்து தீக்காயம் அடைந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தை அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியில் ஏ.எஸ்.என் பாரத் காஸ் கம்பெனியில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்களை நேற்று அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் ஆகியோர் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.இது தொடர்பாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரகடம் சிப்காட் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் எப்படி குடியிருப்புகள் வந்தன என்பது குறித்த விசாரணை நடத்தப்படும்.
மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை பிரிவு சிறப்பு மருத்துவர்களை கொண்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வசதிகள் கொண்ட தீக்காய சிகிச்சை பிரிவை, அறுவை சிகிச்சை அரங்கத்துடன் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரைவில் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் பதவி நிரப்பப்படும் என்றார். இந்நிகழ்ச்சியின்போது, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர் அனிதா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஆபோத்குமார்(32) என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக கிடங்கு உரிமையாளர் ஜீவானந்தம், ஊராட்சி தலைவர் அஜய்குமார் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி ஆய்வு செய்தார். இந்த விபத்து தொடர்பாக பாரத் காஸ் நிறுவனத்தின் வணிக மேலாளர், சென்னை அண்ணா நகர் விற்பனை அதிகாரி ஆகியோரும் ஆய்வு செய்தனர்.