பினாங்கு சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக சென்னை - பினாங்கு இடையே நேரடி விமான சேவை தொடங்குவது தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சி யில், பினாங்கு மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் யோவ் சூன் ஹின், பினாங்கு சுற்றுலா மாநாடு மற்றும் கண்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். 
தமிழகம்

தமிழக பயணிகள் வருகையை அதிகரிக்க சென்னை - பினாங்கு இடையே விரைவில் நேரடி விமான சேவை: பினாங்கு சுற்றுலாத் துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் சென்னை - பினாங்கு இடையேநேரடி விமான சேவை விரைவில் தொடங்க உள்ளதாக பினாங்கு சுற்றுலா துறை அமைச்சர் யோவ் சூன் ஹின் தெரிவித்தார். மலேசியாவில் உள்ள சிறிய மாநிலம் பினாங்கு. வார ஓய்வு நாட்களை கழிப்பதற்கு பல நாட்டினரும் பினாங்குக்கு செல்வதுவழக்கம். கரோனா பரவல் காரணமாக, பினாங்கில் கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாத் துறை பெரிதும் சரிவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கும் விதமாக இந்தியாவில் அம்மாநில சுற்றுலாத் துறை சார்பில் மாநாடு, சுற்றுலா கண்காட்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பினாங்கு சுற்றுலாத் துறை அமைச்சர் யோவ் சூன் ஹின், பினாங்கு சுற்றுலா மாநாடு, கண்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி அஸ்வின் குணசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். செய்தியாளர்களிடம் அமைச்சர் யோவ் சூன் ஹின் கூறியதாவது:

முக்கிய பங்கு வகிப்பது தமிழகம்: பினாங்குக்கு வருவதில் முக்கிய பங்கு வகிப்பது தமிழக சுற்றுலாப் பயணிகள். எனவே, முதல்கட்டமாக சென்னையில், இருந்து பினாங்குக்கு நேரடி விமான சேவை தொடங்குவது குறித்து இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். சென்னையில் இருந்து விரைவில் விமான சேவைதொடங்கும். பினாங்கில் தொழில் தொடர்பான நிகழ்வுகளை நடத்த அம்மாநில சுற்றுலாத் துறை சார்பில் 20 சதவீதம் வரை சலுகைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் சலுகைகள் வழங்கப்படும். இதன்மூலம், உலகம் முழுவதிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, பினாங்கு சுற்றுலா துறையை மீட்டெடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அஸ்வின் குணசேகரன் கூறும்போது, ‘‘சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவில் இருந்துதான் அதிகமானோர் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதை கருத்தில் கொண்டு, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத்தில் 2023 பிப்ரவரி மாதம் பினாங்கு சுற்றுலா மாநாடு, கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவில் இவ்வாறு சந்தைப்படுத்துவதன் மூலம், பினாங்கு சுற்றுலாவை மேம்படுத்த முடியும்’’ என்றார்.

SCROLL FOR NEXT