பண்ணைப்புரத்தில் செப்டிக் டேங்க்கில் 2 சிறுமிகள் தவறி விழுந்து உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் பாவலர் தெருவைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளி ஈஸ்வரன். இவரது மகள் நிகிதா ஸ்ரீ (7). மேற்கு தெருவைச் சேர்ந்த ஏலத் தோட்டத் தொழிலாளி ஜெகதீசன் மகள் சுப (6). நிகிதாயும், சுபயும் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தனர்.
நேற்று மாலை வீட்டுக்கு அருகே பெண்கள் கழிப்பறை அமைந்துள்ள பகுதியில் இருவரும் மற்ற சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அங்கிருந்த செப்டிக் டேங்க் மூடி சேதமடைந்திருந்த நிலையில், அதில் ஏறியபோது மூடி உடைந்து இருவரும் உள்ளே விழுந்தனர். இதைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் 2 குழந்தைகளையும் மீட்டனர். ஆனால், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்திருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேவாரம் -பண்ணைப்புரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.