பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான திருச்சி அரசுக் கல்லூரி பேராசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் ஜெயகுமார் மீது அதே துறையைச் சேர்ந்த முதுநிலை மாணவி ஒருவர் பாலியல் புகார் ஒன்றை தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியிருந்தார்.
இதையடுத்து கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
அதில் மாணவியின் புகாரில் உண்மை இருப்பதாகவும், பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால், கல்லூரி முதல்வர் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக பேராசிரியர் ஜெயகுமார் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உண்மையை கண்டறிந்து, இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில், விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்த கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வரமூர்த்தி, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், ஜெயகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அக்குழு பரிந்துரை செய்தது.
அதன்படி, ஜெயகுமாரை கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரிக்கு பணியிட மாற்றம் செய்து கல்லூரிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ஜெயகுமாருக்கு உதவியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான கவுரவ விரிவுரையாளர் கெல்வின் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.