ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் பி.அமுதா | கோப்புப் படம் 
தமிழகம்

நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் நீக்கம்

செய்திப்பிரிவு

அதிமுகவை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் அதிகார பூர்வமாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலும் நடத்தப்பட்டது.

17 உறுப்பினர்களை கொண்ட மாவட்டஊராட்சியில் அதிமுக 12 வார்டு உறுப்பினர்களையும், திமுக 5வார்டு உறுப்பினர்களையும் பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுகவை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் சத்யா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த மே மாதம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினர்.

இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சத்யாதொடர்ந்த வழக்கில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து மீண்டும் 13 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மான கடிதத்தை மாவட்ட ஆட்சியருக்கு அளித்தனர்.

அதன்பேரில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஆட்சியர்அலுவலகத்தில் கடந்த 13-ம் தேதிஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மொத்தம் 15 உறுப்பினர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவர் சத்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை 15 உறுப்பினர்களும் ஆதரித்தனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இந்த தீர்மானம் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை மூலம் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வுக்கு பிறகு தமிழக ஆளுநருக்குஅனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.சத்யாவை, அந்த பதவியில் இருந்து நீக்கி தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் பி.அமுதா அரசிதழில் நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி காலியாக உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அறிவித்து, அதற்கான தேர்தல் தேதியையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்ற திமுக முயற்சி மேற்கொண்டு வருகிறது.

SCROLL FOR NEXT