சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அக்டோபர் மாத ஊதியம் இன்று வரை வழங்கப்படவில்லை. இதனால் எதிர்காலம் குறித்த அச்சத்தில் ஆழ்ந்துள்ள பணியாளர்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை கவலையளிக்கிறது.
2013-ம் ஆண்டில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு கையகப்படுத்தியதுடன், பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க அதிகாரி சிவதாஸ் மீனாவை தனி அதிகாரியாகவும் நியமித்தது. அதன்மூலம் பல்கலைக்கழகப் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், அது நடக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கையை 5,456 ஆக உயர்த்த கொள்கை அளவில் தமிழக அரசு ஒப்புக் கொண்டது.
அதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி நிதி உதவியை அதிகரித்தல், மீதமுள்ள பணியாளர்களை அவர்கள் விருப்பப்படி கலந்தாய்வு மூலம் பிற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் செய்தல் ஆகியவற்றின் மூலம் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஒருமை பல்கலைக்கழகம் என்ற நிலையிலிருந்து இணைவு பெற்ற பல்கலைக்கழகமாக மாற்றி, அதனுடன், கடலூர், அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இணைப்பதன் மூலம் பல்கலைக்கழகத்தின் வருவாயை அதிகரித்து ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்கு வழங்கலாம்.
எனவே, இந்த திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடிக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும்; பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 9 தவணை அகவிலைப்படி உயர்வு, 6 ஆண்டு பதவி உயர்வு ஆகியவற்றையும் உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.