கோப்புப் படம் 
தமிழகம்

ரூ.5 லட்சம் வரை பணிகளை நேரடியாக செய்ய மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுமா? - கவுன்சிலர்கள் எதிர்பார்ப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை; மதுரை மாநகராட்சியில் ரூ.5 லட்சம் வரை பணிகள் செய்வதற்கு மண்டலத் தலைவர்கள், உதவி ஆணையாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் பழைய நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கவுன்சிலர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கான வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற மூன்றடுக்கு அதிகாரம் இருக்கிறது. இந்த அடிப்படையில் மாநகராட்சிகளில் மண்டலத் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மேயர் என்ற அடிப்படைகளில் பணிகளுக்கு ஒப்புதல் பெற்று நிதி பெறும் அதிகாரம் உள்ளது. ஆனால், மதுரை மாநகராட்சியில் அனைத்து பணிகளுமே மேயரிடம் ஒப்புதல் பெற்றே நிறைவேற்றப்படுவதால் வார்டுகளில் சாதாரண குடிநீர் குழாய் உடைப்பு, பாதாளசாக்கடை அடைப்பு உள்ளிட்ட சாதாரண பணிகளை கூட உடனுக்குடன் நிறைவேற்ற முடியவில்லை என்று கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் கூறியதாவது, “மதுரை மாநகராட்சியில் கடந்த காலத்தில் ரூ.5 லட்சம் வரையிலான பணிகளை மண்டல தலைவர்களே ஒப்புதல் வழங்கி உதவி ஆணையர் மூலமாக நிதியை பெற்று பணிகளை நிறைவேற்றலாம் என்ற நடைமுறை இருந்துள்ளது. ஆனால், தற்போது அதை நிறுத்தி வைத்துவிட்டார்கள். அதனால், மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளில் அவசரத்திற்கு ரூ.20 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வேலையை கூட மண்டலத்தலைவர்களால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த பணிகளையுமே மேயர், ஆணையரிடம் சென்று ஒப்புதல் பெற்று வருகிற நடைமுறையை வைத்துள்ளனர். அதை ரத்து செய்து பழைய நடைமுறையையே பின்பற்ற அனைத்து மாநகராட்சி கூட்டத்திலும் மண்டலத்தலைவர்களும், கவுன்சிலர்களும் வலியுறுத்தி வருகிறோம்.

மாநகராட்சி ஆணையாளரிடம்தான் நிதி ஒதுக்குவதற்கான அதிகாரம் உள்ளது. ரூ.10 லட்சத்திற்கு மேல் பணிகள் சென்றால் மட்டுமே அந்த திட்டப்பணிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் மேயரின் ஒப்புதலையும், ஆலோசனையையும் பெற்றால் போதும்.

ஆனால், தற்போது மேயரே அனைத்து பணிகளுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை வைத்துக் கொண்டார். தற்போது அனைத்து பணிகளுக்குமே மாநகராட்சி மைய அலுவலகம் சென்று வர வேண்டிய உள்ளதால் பொதுமக்களுடைய அவசர அத்தியாவசிய பணிகளை மண்டல அலுவலகங்களால் உடனுக்குடன் நிறைவேற்றி கொடுக்க முடியவில்லை. மாநகராட்சி மைய அலுவலகத்திற்கு சென்று ஒவ்வொரு பணிக்கு ஒப்புதல் பெற்று டெண்டர்விட்டு, ஒர்க் ஆர்டர் வழங்கி நிதி வர 6 மாதம் ஆகிவிடுகிறது. சிறிய சிறிய தொகைக்கு கூட பணிகளை மேற்கொள்ள மண்டலத் தலைவர்களுக்கு செய்வதற்கு அதிகாரம் இல்லை என்றால் இந்த பதவியே எதற்கு என மனநிலை வந்துவிட்டது.

சமீபத்தில்தான் ரூ.21 லட்சம் நிதி ஒதுக்கினார்கள். அது கவுன்சிலர்களின் வார்டுகளில் உள்ள மராமத்துப்பணிகளை செய்வதற்கே போதுமானதாகிவிட்டது. கவுன்சிலர்களிடம் உங்கள் வார்டுக்கு என்ன தேவை என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றி கொடுத்துள்ளோம். ஆனால், அந்த பணிகளுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. அதனால், மண்டலத்திற்கு கவுன்சிலர்களை அழைத்தால் எதுவுமே நடக்காத கூட்டத்திற்கு எதற்கு வர வேண்டும் என்று எங்களை மதிப்பதே இல்லை. மாநகராட்சி ஆணையாளராக கார்த்திகேயன் இருந்தபோது, கடந்த காலத்தைப்போல் மண்டல அலுவலகங்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான பணிகளை அவர்களே ஒப்புதல் வழங்கி நிறைவேற்றுவதற்கு அதிகாரம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஆனால், அவர் அதற்கு இடமாறுதலாகி சென்றுவிட்டார். அவர் கூடுதல் ஒரு நாள் இருந்திருந்தால் அவர் மண்டல அலுவலங்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கி இருப்பார். பதவிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்டது. மக்கள் பொறுமையாக இருக்கிறார்கள். ஒரு ஆண்டு முடிந்தவிட்டால் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஆனால், மதுரை மாநகராட்சியில் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படாமல் மேயரிடமே உள்ளது.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாநகராட்சி உதவி ஆணையாளர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘‘ரூ.5 லட்சம் வரை பணிகளை மண்டலத்திலே ஒப்புதல் பெற்று நிதியை பெறக்கூடிய நடைமுறை தற்போதும் மற்ற மாநகராட்சிகளில் உள்ளது. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மாநகராட்சி ஆணையாளரே எந்த பணிகளுக்கும் நேரடியாக ஒப்புதல் வழங்கலாம். ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட பணிகளுக்குதான் மேயர் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், மதுரை மாநகராட்சியில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. தற்போது அனைத்துப்பணிகளும் ஒப்புதல் பெற மேயர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்போது, அவர் அரசியல் ரீதியாக பார்ப்பதால் கவுன்சிலர்கள் ஒரு புறம் புறக்கணிக்கப்பட்டாலும் மற்றொரு புறம் பணிகள் தாமதமாகி அவர்களுடைய வார்டு மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ’’ என்றார்.

SCROLL FOR NEXT