சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் தொல்லைகளை கட்டுப்படுத்தும் விதமாக அபராதத் தொகையை ரூ.1550-இல் இருந்து ரூ.3000 ஆக மாநகராட்சி உயர்த்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத் துறையினரால் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. மேலும், இந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1,550 அபராதம் விதிக்கப்படுகிறது. 2021 ஜூலை 7ஆம் தேதி முதல் 2022 ஜூன் 3-ம் தேதி வரை 4,099 மாடுகள் பிடிக்கப்பட்டு 61 லட்சத்து 63 ஆயிரத்து 750 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதிக அளவில் மாடுகள் பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், மாடுகளின் உரிமையாளர்களை அழைத்து மண்டல அளவில் கூட்டம் நடத்தியும் மாடுகள் சாலையில் திரிவது குறையாமல் உள்ளது. இதனை தடுக்கும் விதமாக அபராத தொகையை நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.