தமிழகம்

அப்பாவிகளின் வங்கிக் கணக்கு மூலம் கறுப்புப் பணம் மாற்றும் மோசடியை தடுத்திடுக: ராமதாஸ்

செய்திப்பிரிவு

அப்பாவி மக்களின் கணக்குகளை பயன்படுத்தி கறுப்புப் பணத்தை மாற்றுவோர் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் போதிய முன்னேற்பாடுகளை செய்யாமல், ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மற்றொருபுறம், அப்பாவி மக்களின் வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தங்களின் கறுப்புப்பணத்தை வெளுப்பதும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் தாள்களுக்கு பதிலாக போதிய அளவில் புதிய ரூபாய் தாள்கள் வெளியிடப்படாததால் பணப்புழக்கம் குறைந்து அனைத்து விதமான வணிகங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வணிகம் மட்டுமின்றி வாழ்வாதாரமும், வாழ்க்கையும் பறிபோய் கொண்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தின் பாண்டா மாவட்டம் தின்ட்வாரி நகரில் திங்கட்கிழமை நடந்த நிகழ்வுதான் இதற்கு சிறந்த உதாரணமாகும். தின்ட்வாரி கிராமத்தைச் சேர்ந்த தர்மேந்திர வர்மா என்ற கூலித் தொழிலாளியின் 4 வயது மகள் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அவருக்கு மருத்துவம் அளிக்க கையில் பணமில்லாமல் தவித்த வர்மா தின்ட்வாரியில் உள்ள அலகாபாத் கிராமிய வங்கியில் தனது கணக்கில் உள்ள சிறிதளவு பணத்தை எடுப்பதற்காக அலைந்திருக்கிறார். ஆனால், அவ்வங்கிக்கு ரிசர்வ் வங்கி பணம் அனுப்பி வைக்காததால் தர்மேந்திர வர்மா உட்பட யாருக்கும் பணம் கிடைக்கவில்லை.

வங்கிக்கு திங்கட்கிழமை பணம் வந்திருப்பதாக தகவல் கிடைத்ததால், பணத்தை எடுத்துக் கொண்டு, குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லலாம் என்ற எண்ணத்தில் வங்கிக்கு அழைத்துச் சென்றுள்ளார். தந்தையுடன் வரிசையில் நின்றிருந்த குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மற்றொருபுறம், பெங்களூரில் நடந்த நிகழ்வு இன்னும் கொடுமையானது. மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் சகோதரர் பாஸ்கர் காமாலையால் பாதிக்கப்பட்டு பெங்களூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை பழைய ரூபாய் தாள்களாக செலுத்த அமைச்சர் சதானந்த கவுடா முன்வந்த போது அதை வாங்க மறுத்துவிட்ட மருத்துவமனை நிர்வாகம், புதிய ரூபாய் தாள்களாகத் தான் தர வேண்டும் என்றும், அவ்வாறு தந்தால் தான் உடலை ஒப்படைக்க முடியும் என்றும் கறார் காட்டியிருக்கிறது. இறுதியில் மருத்துவக் கட்டணத்திற்கான காசோலையை மத்திய அமைச்சர் சதானந்த கவுடா செலுத்திய பிறகு தான் பாஸ்கரின் உடலை மருத்துவமனை ஒப்படைத்துள்ளது.

வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் அதை எடுக்க முடியாததால், சிகிச்சை தர முடியாமல் குழந்தையை பறிகொடுப்பது கொடுமையானது. பணத்தை எடுப்பதற்காக வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்திருந்த போது உடல் நலம் பாதிக்கப்பட்டும், வேறு காரணங்களாலும் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இவை அனைத்துக்கும் காரணம், மத்திய அரசின் நடவடிக்கையால் பணத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு தான். பணம் இல்லாததால் மத்திய அமைச்சரே தமது சகோதரரின் உடலை வாங்க முடியாமல் தவித்தார் என்றால் மற்றவர்களின் நிலைமை என்னவாக இருக்கும்? என்பதை ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

பணம் இல்லாததால் மக்கள் படும் அவதி ஒருபுறமிருக்க, அதிக எண்ணிக்கையில் பணியாளர்களைக் கொண்ட கல்வி நிறுவனங்களும், பெருநிறுவனங்களும் அவற்றிடம் உள்ள கறுப்புப் பணத்தை ஊழியர்களின் வங்கிக் கணக்கில் அவர்களின் அனுமதி இல்லாமலேயே செலுத்தி வெள்ளையாக்கி திருப்பி எடுத்துக் கொள்கின்றன.

ஆந்திராவின் விஜயவாடாவிலுள்ள காந்தி மகளிர் கல்லூரி என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் வங்கிக் கணக்கிலும் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை செலுத்தப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் அவர்களுக்குத் தெரியாமலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. இதுபற்றி கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட பணியாளர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றனர்.

தமிழகத்திலும் சில தனியார் கல்வி நிறுவனங்களில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது. ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம் அதன் பணியாளர்கள் மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்ற போது, அதை வருமானவரித் துறை கண்டுபிடித்து சோதனை நடத்தியதில் ரூ.8 கோடி கறுப்புப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

பழைய ரூபாய் தாள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை புதிய ரூ.500 தாள் சென்னையின் சில பகுதிகளைத் தவிர தமிழகத்தின் மற்ற ஊர்களை சென்றடையவில்லை. இதனால் வங்கிக் கணக்கில் பணமிருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் தமிழக மக்கள் தவிக்கின்றனர். இதேநிலை நீடித்தால், உச்ச நீதிமன்றம் எச்சரித்தவாறு கலவரம் வெடிக்கும் ஆபத்து உள்ளது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

அதைத் தடுக்க தமிழகம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் புதிய ரூ.500 தாள்கள் மற்றும் ரூ.100 தாள்களை அதிக எண்ணிக்கையில் அனுப்பி பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும்.

வங்கிகளில் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். அத்துடன் அப்பாவி மக்களின் வங்கிக் கணக்கை தவறாகப் பயன்படுத்தி, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT