சென்னை உயர் நீதிமன்றம் 
தமிழகம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை சீராய்வு மனு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் சீராய்வு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், "தற்போதைய சட்டம் - ஒழுங்கு சூழலில் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம் மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை காக்க கண்காணிக்க காவல் துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT