பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை எஸ்ஆர்எம் பல் கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி, கோடிக்கணக்கில் பணம் வசூலித்த வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவாகி 168 நாட்கள் ஆகிவிட்டன. அவரைக் கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
மதன் காணாமல்போன வழக்கு அவரும், அவரது குடும்பத்தினரும் மட்டும் சம்பந்தப்பட்ட வழக்கு அல்ல. எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி 112 மாணவர்களிடம் மொத்தம் ரூ.74 கோடியை மதன் வசூலித் துள்ளார். அந்த பணம் முழுவதை யும் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவிடம் ஒப்படைத்துவிட்ட தாக கடிதத்தில் மதன் குறிப் பிட்டுள்ளார். மருத்துவப் படிப்புக் குப் பணம் கொடுத்த அனைவருமே தாங்கள் பச்சமுத்துவை நேரில் சந்தித்ததாகவும், அவர் கூறியதன் பேரில்தான் மதனிடம் பணம் கொடுத்ததாகவும் கூறியுள்ளனர்.
மதன் காணாமல்போன வழக்கில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவை காவல்துறை கைது செய்தது. அவரிடம் முறையாக விசாரணை நடத்தப்பட்டிருந்தால், மதன் இருப்பிடம் குறித்த பயனுள்ள தகவல் கிடைத்திருக்கும். பச்ச முத்துவின் ஜாமீன் மனுவுக்கு நீதிமன்றத்தில் காவல்துறை எதிர்ப்பு தெரிவிக்காததால், அவர் ரூ.74 கோடி ஜாமீன் தொகை செலுத்தி விட்டு வெளியே வந்துவிட்டார்.
மதனைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் தமிழக காவல்துறை கண்டுகொள்ளாத மனநிலையில் உள்ளது. மதன் மாயமான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். இவ்வழக்கு 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, இந்த விவரத்தை நீதிபதிகளிடம் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்.