தமிழகம்

தலைமறைவு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வெகுமதி அறிவிப்பு: மதுரையில் நாளிதழ் அலுவலக எரிப்பு விசாரணையை விரைவுபடுத்தும் சிபிஐ

செய்திப்பிரிவு

உயர் நீதிமன்ற கிளையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வரும் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை துரிதப்படுத்தும் விதமாக இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை கைது செய்ய சிபிஐ வெகுமதி அறிவித்துள்ளது.

திமுகவில் ஸ்டாலின், அழகிரி ஆகியோரில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பது தொடர்பாக நாளி தழ் ஒன்று சார்பில் 2007-ல் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப் பால் மதுரையில் உள்ள அந்த அலுவலகத்தில் அழகிரி ஆதர வாளர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் ஊழியர்கள் கோபி நாத், வினோத், பாதுகாவலர் முத்து ராமலிங்கம் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அட்டாக் பாண்டி, டிஎஸ்பி ராஜாராம் உட்பட 17 பேர் மீது ஒத்தக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை சிபிஐ நீதிமன்றம் 17 பேரையும் விடுதலை செய்து 9.12.2009 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, அனைவருக்கும் தண்டனை வழங்கக் கோரி சிபிஐ சார்பில் 2011-ல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி, சம்பவத்தில் கொல்லப்பட்ட வினோத்தின் தாயார் பூங்கொடி தனியாக மனு தாக்கல் செய்தார்.

இவ்விரு மனுக்களும் உயர் நீதிமன்ற கிளையில் 5 ஆண்டு களுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஒவ்வொரு முறை விசா ரணையின்போதும், எதிர்மனுதாரர் கள் சார்பில் (குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டவர்கள்) ஒவ்வொரு காரணங்களாகக் கூறப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

இதன் காரணமாக அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள் திருச்செல்வம், சரவணமுத்து, முருகன், கந்தசாமி, ராமையா பாண்டியன், ரமேஷ்பாண்டியன், வழிவிட்டான், தயாமுத்து, சுதாகர், திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன், ரூபன், மாலிக்பாட்சா ஆகிய 12 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உயர் நீதிமன்றம் 5.2.2016 அன்று உத்தரவிட்டது. இவர்களில் 9 பேரை சிபிஐ கைது செய்தது. ஒருவர் சரண் அடைந்தார். கைது செய்யப்பட்டவர்களில் 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வர்களில் தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி முருகன் ஆகி யோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். இருவரை யும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு நவ. 14-ம் தேதி மீண் டும் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் இருவரையும் விரைவில் கைது செய்து, மேல்முறையீட்டு மனுவை விரைவில் முடிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இதையடுத்து தயாமுத்து, திருமுருகன் என்ற காட்டுவாசி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் என சிபிஐ நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத னால் உயர் நீதிமன்ற கிளையில் 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் முடியும் நிலை எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT