தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 12,429 பேர் விண்ணப்பம்; முதுநிலை மருத்துவ படிப்பு தரவரிசை வெளியீடு: ஆன்லைனில் இன்று கலந்தாய்வு தொடக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஆன்லைனில் இன்று தொடங்குகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி, எம்எஸ், படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 1,162 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 763 இடங்களும் உள்ளன. பல் மருத்துவமான எம்டிஎஸ் படிப்புக்கு அரசு கல்லூரிகளில் 31 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 296 இடங்கள் உள்ளன. தேசிய வாரிய பட்டப் படிப்பான டிஎன்பி-க்கு 94 என மொத்தம் 2,346 இடங்கள் இருக்கின்றன.

இந்த இடங்களுக்கு 11,178 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல், தனித்தனியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக இன்றுமுதல் நடைபெறும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு 22-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அக்டோபர் 3-ம் மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம். நேற்று முன்தினம் வரை 21,183 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 12,429 பேரிடம் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில் எச்1என்1 காய்ச்சலால் 421 பேரும், டெங்குவால் 344 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலாளர் முத்துச்செல்வன், மருத்துவக் கல்வி துணை இயக்குநர் சிவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT