சென்னை: சென்னையில் நேற்று திடீரென பெய்த மழையால் அண்ணா சாலைஉட்பட பல்வேறு சாலைகளில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் சாலைகளில் அணிவகுத்து நின்றன. சென்னையில் வாகன நெரிசலுக்குத் தீர்வுகாண பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின், சில மாற்றங்களை போக்குவரத்து போலீஸார் செயல்படுத்தினர். அதன்படி, அண்ணா மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் எல்ஐசி நிறுத்தத்தைக் கடந்ததும், தாராப்பூர் டவர் இடதுபுறமாக திரும்பி, டேம்ஸ் சாலை வழியாகச் சென்று, வலதுபுறம் பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலையில் இணைய வேண்டும்.
அகலமான அண்ணா சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் டேம்ஸ் சாலை சென்று, குறுகலான பிளாக்கர்ஸ் சாலைக்குள் நுழைவதால் சிரமம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென பெய்த மழையால் இந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காசினோ திரையரங்கம் எதிரேயும் கடும் நெரிசல் காணப்பட்டது. தற்போதைய நிலையில், வாலாஜா சாலையில் வரும் வாகனங்கள், அண்ணா சிலை அருகே வலதுபுறம் திரும்பி சென்ட்ரல் நோக்கிச் செல்ல முடியாது. எனவே, அண்ணா சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, சுமார் 50 மீட்டர் தொலைவில், ‘யு டர்ன்’ எடுத்து, சென்ட்ரலை நோக்கிச் செல்ல வேண்டும்.
இந்தப் பகுதியிலும் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு போலீஸார் இருந்தபோதிலும் அவர்களால் வாகனங்களைக் கட்டுப்படுத்த முடிய வில்லை. சாதாரண மழைக்கே இத்தகைய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழை காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும். எனவே, இந்த விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, இந்தப் பகுதியில் பழையபடி போக்குவரத்தை தொடர போலீஸார் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அண்ணாசாலை மட்டுமல்லாது சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.