தமிழகம்

6 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத் தேர்வு வினாத்தாள் ஆர்.எஸ்.மங்கலத்தில் ‘லீக்’ - விசாரணைக்கு உத்தரவு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே 6,7,8-ம் வகுப்பு முதல் பருவத் தேர்வு வினாத்தாள் வெளியானது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.மணக்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 6,7,8 வகுப்புகளுக்கான அறிவியல் பாட முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு இன்று (செப்.29) நடைபெறுகிறது.

முன்கூட்டியே வினாத்தாள்: இதையொட்டி, அப்பள்ளி தலைமையாசிரியர் அறிவியல் தேர்வுக்கான வினாத்தாளை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து நேற்று காலை பெற்றுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று தேர்வு நேரத்தில் வழங்க வேண்டிய அந்த வினாத்தாளை நேற்றே மாணவர்களிடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த வினாத் தாளை பார்த்து படித்துவிட்டு தேர்வுக்கு வருமாறு மாணவர்களிடம் கூறி யதாகக் கூறப்படுகிறது.

தேர்வுக்கு முன்னரே வினாத் தாள் வெளியிட்டது குறித்த தகவல் வெளியில் பரவத் தொடங்கியது.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.பாலுமுத்துவிடம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் விசாரணைக்கு அழைக் கப்பட்டுள்ளனர். வினாத்தாளை வெளியிட்டது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT