ஆர்எஸ்எஸ் ஊர்வலம் | கோப்புப்படம் 
தமிழகம்

ஆர்எஸ்எஸ் ஊர்வல விண்ணப்பம் நிராகரிப்பு: உள்துறை செயலர், டிஜிபிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரித்த திருவள்ளூர் காவல் துறையினருக்கும், உள்துறை செயலாளர், டிஜிபிக்கும் வழக்கறிஞர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தை திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் செப்டம்பர் 27-ம் தேதி நிராகரித்துள்ளார்.

இது நீதிமன்ற அவமதிப்பு செயல் எனக் கூறி, அணிவகுப்புக்கு அனுமதி கோரிய கார்த்திகேயன் சார்பில் வழக்கறிஞர் ஒருவர், தமிழக உள்துறை செயலாளர் பனீந்தர்ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, திருவள்ளூர் எஸ்பி மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், "அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அனுமதி மறுக்க காவல் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்த உத்தரவை உடனடியாக எந்த நிபந்தனையுமின்றி திரும்பப் பெற வேண்டும். தவறும்பட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய நேரிடும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது. உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அதன் விவரம் > ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்ய முடியும்: சென்னை ஐகோர்ட்

SCROLL FOR NEXT