திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் வஹிதா பேகம். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் தொலைதூர கல்வித் திட்ட மைய சிறப்பு அலுவலராக 22.1.2011-ல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவர் அதற்கான தகுதியை பெறவில்லை, என 2016-ல் பல்கலைக்கழகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
பின்னர் 2017-ல் சிறப்பு அலுவலர் நியமனத்தை ரத்து செய்து ஆய்வக பணியாளராக பதவி இறக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து உயர் நீதிமன்ற கிளையில் வஹிதா மனு தாக்கல் செய்தார்.
இதை நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.
பல்கலைக்கழகம் தரப்பில், பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றுள்ளது. மனுதாரர், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, டிப்ளமோ, எம்ஏ, எம்பில், பிஏ என்ற வரிசையில் படித்துள்ளார். 10 2 3 என்ற விகிதத்தில் படிக்கவில்லை. எம்ஏ படிப்பை திறந்தநிலை கல்வித் திட்டத்தில் தான் படித்துள்ளார்.
இது நியமனத்துக்குப் பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் 6 ஆண்டுகள் சிறப்பு அலுவலராக பணியாற்றியுள்ளார். எம்ஏ முடித்த பிறகு, பிஏ பட்டம் பெற்றுள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசு ஏற்கும் வரை திறந்தநிலை பட்டங்கள் ஏற்கப்பட்டுள்ளன. திறந்தநிலை கல்வித் தகுதி தொடர்பான அரசாணைக்கு முன்பே மனுதாரர் பட்டம் பெற்றுள்ளார்.
திறந்தநிலை கல்வித் திட்டத்தின் 4.4.2013-க்கு முன்னதாக நடந்த நியமனங்களை தொந்தரவு செய்ய வேண்டியதில்லை. முறை யான கொள்கை முடிவுகள் இல்லாததால்தான் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இளங்கலை பட்டம் பெற்ற பிறகே முதுகலை பட்டம் பெற வேண்டும் என பல்கலைக் கழகத்தில் எந்த வரைமுறையும் இல்லை. குடும்ப சூழல் உள்ளிட்ட காரணங்களால் படிப்பைத் தொடர முடியாத பலரின் நிலையை கருத்தில் கொண்டே புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரரை பதவி இறக்கம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை மீண்டும் சிறப்பு அலுவலராக நியமிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.