பொருட்களைப் போல குழந்தைகளை விலைக்கு வாங்கும் நிலை மாறி, பெண் குழந்தைகளைத் தத்தெடுக்க மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருவது ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி உள்ளதாக இந்திய குழந்தைகள் நலச்சங்க பொதுச் செயலாளர் கிரிஜா குமார்பாபு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (யுனிசெப்), இந்திய குழந்தைகள் நலச் சங்கமும் இணைந்து, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த மண்டல அளவிலான 3-வது கருத்தரங்கு கோவையில் நேற்று தொடங்கியது. கருத்தரங்கை கோவை மாவட்ட ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தொடங்கி வைத்தார். இந்திய குழந்தைகள் நலச் சங்க துணைத் தலைவர் எம்.பி.நிர்மலா, துணைத்தலைவர் சந்திராதேவி தணிகாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், அரசு குழந்தைகள் பராமரிப்பு அலகில் பணியாற்றும் அலுவலர்கள், இந்திய இளைஞர்களின் சட்டத்தின் கீழ் இயங்கும் இளைஞர் நலக் குழுமம், குழந்தை நலக் குழும உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் என 11 மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள் ளனர்.
இந்திய குழந்தைகள் நலச்சங்க மாநில பொதுச் செயலாளர் கிரிஜா குமார்பாபு பேசியதாவது: குழந்தைகள் நல்ல முறையில் குடும்பங்களில் வளர்வதற்கான சூழலை பெற்றோரும், அரசும், தன்னார்வ அமைப்புகளும் ஏற்படுத்துவதே இக் கருத்தரங்கின் நோக்கம். மேலைநாடுகளில் குழந்தை பாதுகாப்புக்கான அரசு அமைப்புகள் உள்ளன. ஆனால் நமது நாட்டில் தற்போதுதான் அரசு இதுபோன்ற செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது. எனவே அதில் பயிற்சி தேவைப் படுகிறது. இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் அரசுக்கு பரிந்துரைகளைக் கொடுத்து, குழந்தைகள் பாதுகாப்புக்கான சட்டங்களில் அவற்றை சேர்க்க வலியுறுத்துவோம். அனைத்து குழந்தைகளுக்கும் அன்பான, அரவணைப்பான குடும்பச் சூழல் வழங்க வேண்டும் என்பதையே குழந்தைகளுக்கான உரிமை சாசனம் வலியுறுத்துகிறது. ஆனால் நடைமுறையில், பெற்றோர்களை இழக்கும் குழந்தைகளுக்கு அப்படியான சூழல் கிடைப்பதில்லை. 18 வயதைத் தாண்டியும் ஆதரவற்றவர்கள் என்ற பெயரே நிலைத்து அவர்களுக்கு அடையாளமாகி விடுகிறது.
அதேபோல, காப்பகங்களில் குழந்தைகளை பராமரிப்பதிலும் பல சிரமங்கள் உள்ளன. உடல் ரீதியான, பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். குழந்தைகளை காப்பகங்களில் சேர்க்காமல், குடும்பச்சூழலில் வளர்க்க மத்திய அரசு ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்துகிறது. அதன்கீழ் குழந்தை பாதுகாப்பு அலகுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதில் குழந்தைகள் பாதுகாப்புக்கான பணிகளை முறைப்படுத்த வேண்டிய தேவையும் நமக்கு இருக்கிறது.
பெற்றோரை இழந்த குழந்தை, குழந்தை இல்லாத பெற்றோரை அடையும் தத்தெடுத்தல் திட்டம் இதில் முதல் படிநிலையாக இருக்கிறது. அடுத்ததாக, நம் கலாசாரத்தோடு ஒன்றிய தற்காலிக குழந்தை வளர்ப்பு முறை இருக்கிறது.
உதவித்தொகை மூலம் குழந்தைகளை வளர்த்தல் என்பது மூன்றாவதாக உள்ளது. இந்த மூன்று திட்டங்கள் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் நலனை பாதுகாக்க முடியும். குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் 2015-ல், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வழிமுறைகள் கூறப்பட்டாலும், முழு அளவில் அவை நடைமுறைக்கு வரவில்லை. அவை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, இதுபோன்ற கருத்தரங்குகள் மூலம் கருத்துகள் கேட்கப்படும். பிறகு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு, சமூகநலத்துறை செயலர் ஆகியோரிடம் அவை பரிந்துரைகளாக சமர்பிக்கப்படும்.
குழந்தைகளை தத்தெடுப்பது சுலபமாக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் உள்ள ‘காரா’ என்ற அமைப்பு தத்தெடுத்தலை ஆன்லைனில் கொண்டு வந்துள்ளது. இதனால் இடைத்தரகர்கள் ஆதிக்கம், வெளிப்படைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகள் வெகுவாக குறைந்துவிட்டன.
குழந்தைகளை ஊடகங்களில் ஈடுபடுத்துவதற்கு வரையறைகள் உள்ளன. ஆனால் அவை எந்த அளவில் செயல்படுகின்றன என்பதை கண்காணிக்க ஏற்பாடுகள் இல்லை. ஊடகங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதால், அவர்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்களை வளர்க்கும். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண, சரியான அமைப்பை அரசு அமைக்க வேண்டும். மாநில அரசுக்கு இதுகுறித்த பரிந்துரைகளை அளித்துள்ளோம். விரைவில் மத்திய அரசுக்கும் பரிந்துரைப்போம் என்றார்.