பவானி அரசுப் பள்ளியில் மாணவர்கள் குழுவாக அமர்ந்து தேர்வு எழுத அனுமதித்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பவானி காமராஜர் நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியையாக உள்ள கிருஷ்ணகுமாரி, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புக்கு தமிழ் பாடமும் கற்பித்து வருகிறார்.
நேற்று முன் தினம் காலாண்டு தேர்வு தொடங்கிய நிலையில், தமிழ் தேர்வுக்கான கேள்வித்தாளை மாணவர்களுக்கு வழங்கிய ஆசிரியை கிருஷ்ணகுமாரி, மாணவ, மாணவியர் குழுவாக அமர்ந்து தேர்வு எழுத அனுமதித்துள்ளார்.
அப்போது அங்கு வந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் இதனை காட்சிப் பதிவாக்கி, கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து மாணவர்களை குழுவாக அமர்ந்து தேர்வு எழுத வைத்த தலைமை ஆசிரியை கிருஷ்ணகுமாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வகையில், பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.