சென்னை: அமைச்சர் சேகர்பாபுவின் சகோதரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருப்பவர் பி.கே.சேகர்பாபு. இவரது அண்ணன் பி.கே.தேவராஜூலு (63). இவர் சென்னை ஓட்டேரி, நாராயண மேஸ்திரி 3-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அண்மைக் காலமாக அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தேவராஜூலு தனது வீட்டில் தூக்கிட்டுக் கொண்டார். இந்த விவகாரம் குறித்து ஓட்டேரி போலீஸார் வழக்குப் பதிந்துவிசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓட்டேரியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த தேவராஜூலு உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், நிர்வாகிகளும் உடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.