தி.மலை அண்ணாமலையார் கோயிலில் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
தமிழகம்

தி.மலை அண்ணாமலையார் கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ நிர்வாகி களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை ஆய்வு செய்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள், தொழில் நிறுவனங்கள் மீது கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது.

இதையடுத்து, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்படை அமைக்கப்பட்டு, பெட்ரோல் குண்டு வீசியதாக பிஎப்ஐ, எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும், பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு துப்பாக்கி ஏந்திய காவலருடன், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் மற்றும் பே கோபுரம் ஆகிய 4 கோபுர வழி தடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்களது உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், சீருடை அல்லாத காவலர்கள் மூலம், பக்தர்களின் நடவடிக்கை களை கண்காணிக்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT