படவிளக்கம்: திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் இருந்து மங்கலம் சாலை பகுதிக்கு செல்லும் வகையில், பாலம் அமைக்கும் பணிக்காக நேற்று அளவீடு செய்யும் தொடங்கியதை பார்வையிட்ட மேயர் ந.தினேஷ்குமார், துணை மேயர் எம்கேஎம்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர். 
தமிழகம்

திருப்பூர் | துணை மேயர் முயற்சியால் 14 ஆண்டுகளுக்கு பிறகு  மேம்பால பணி மீண்டும் தொடக்கம்

இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் முயற்சியால் 14 ஆண்டுகளுக்கு பிறகு, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாலப்பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலம் அளக்கும் பணி நடந்தது.

திருப்பூர் அணைப்பாளையம் பகுதியில் இருந்து மங்கலம் சாலை பகுதிக்கு செல்லும் வகையில், கடந்த 2008-ம் ஆண்டு பாலம் அமைக்க பூமி பூஜை நடந்தது. தேவைப்படும் நிலம் கையகப்படுத்தப்படும்போது சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் நீண்ட காலமாக இந்த பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பலரிடம் நடந்த பேச்சுவார்த்தையை, சுமூகமான முறையில் துணை மேயர் எம்.கே.எம். பாலசுப்பிரமணியம் தற்போது முடிவுக்கு கொண்டுவர முயன்றார்.

பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பிறகு வழக்கு தொடுத்தவர்களில் சிலர் அதனை திரும்ப பெற்றனர். பாலம் அமையும் பகுதியில் உள்ள நில உரிமையாளர்களிடம் பேசி, இறுதிக்கட்டமாக நிலம் அளவீடு செய்யும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. இதையொட்டி நில அளவீடு பணி நடந்தது. இதனை மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

துணை மேயர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: 14 ஆண்டுகளுக்கு பிறகு பாலப் பணிகள் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வில் மண்டலத் தலைவர் கோவிந்தராஜ், கவுன்சிலர் தங்கராஜ், உதவி ஆணையர் செல்வநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT