சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுகவின் அரசியல் ஆலோசகராக நியமித்து ஓ.பன்னீர்செல்வமும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டுள்ளனர்.
பண்ருட்டி ராமச்சந்திரன்: தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவராக கருதப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையிலும், அதன்பிறகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அமைச்சரவையிலும் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்தவர்.
தொடக்த்தில் திமுகவில் இருந்த அவர், பின்னர், அதிமுகவில் இணைந்தார். அதன்பின்னர் பாமகவில் பணியாற்றிய அவர், தேமுதிகவில் இணைந்து அக்கட்சியின் அவைத்தலைவரானார். கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ஆலந்தூர் தொகுதியில் வெற்றிபெற்றார். பின்னர் 2013-ம் ஆண்டு தேமுதிகவில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன் கடந்த 2014-ம் ஆண்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார்.
ஓபிஎஸ் ஆதரவு: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து இபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளாக பிரிந்தனர். இந்நிலையில், கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி எடப்பாடி பழனிசாமியும், இபிஎஸ் ஆதரவாளர்களை நீக்கி ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டனர்.
கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், " எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து இந்த இயக்கத்திற்கு உழைத்தவர்கள் உடன் இருந்து பாடுபட்டவர்கள், கட்சியை வளர்க்க ஒத்துழைப்பு கொடுத்தவர்கள், பலமாக, தூணாக இருந்து உழைத்தவர்கள் அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை இணைத்துக்கொண்டு கட்சி செயல்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். பண்ருட்டி ராமச்சந்திரன், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரையும் கட்சியில் இணைக்க வேண்டும்" என்று விரும்புவதாக கூறியிருந்தார்.
சசிகலா சந்திப்பு: ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த அறிவிப்பு வெளியான பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலா பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவைக் காப்பாற்ற முடியாது. அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை. அவரின் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வைத்து இயக்கத்தைச் சீரழிக்கக் கூடாது. முதலில் கட்சியைச் சரி செய்துவிட்டு, பிறகு மக்கள் ஆதரவை அவர் பெற வேண்டும். அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை. ஈபிஎஸ் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது" என்று கடுமையாக சாடியிருந்தார்.
இதற்கு பதிலளித்த இபிஎஸ், " சிலரது தூண்டுதலின்பேரில் பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சிக்கிறார். ஒரு கிளை கழகச் செயலாளருக்கு இருக்கும் தகுதிகூட அவருக்கு இல்லை" என்று பதிலளித்திருந்தார். இதனை கண்டிக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் அனைவரும் அரசியல் ஆலோசகருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்டத்திட்டங்களுக்கு மாறுபட்டு கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கட்சியின் அமைப்பு செயலாளரான பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சியினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.