தமிழகம்

இந்து இயக்க பிரமுகர்கள் வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 3 பேர் கைது: மதுரையில் அக்குபஞ்சர் தெரபிஸ்ட் கைது

செய்திப்பிரிவு

கோவை / மதுரை: பொள்ளாச்சியில் இந்து இயக்க பிரமுகர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட வழக்கில் பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் அழகப்பா லேஅவுட் பகுதியில் வசிக்கும் தெற்கு மாவட்ட பாஜக அமைப்பு சாரா பிரிவின் மாவட்ட செயலாளர் பொன்ராஜ் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடி கடந்த 23-ம் தேதி உடைக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, குமரன் நகரில் உள்ள விஎஸ்வி திருமண மண்டபம் வீதியைச் சேர்ந்த, இந்து முன்னணி உறுப்பினரான சிவக்குமார் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது ஆட்டோக்களின் கண்ணாடிகளை மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.

டீசல் பாக்கெட்: இதே வீதியைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் சரவணகுமாரின் கார் கண்ணாடியும் கடந்த 23-ம் தேதி உடைக்கப்பட்டிருந்தது. மேலும், நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் 3 பிளாஸ்டிக் கவரில் டீசலை நிரப்பிசரவணக்குமாரின் கார் மீது வீசிதீப்பற்ற வைக்க முயற்சித்துள்ளனர். அது முடியாததால் காரின் கண்ணாடியை உடைத்துச் சென்றது தெரியவந்தது. அதேபோல், விஎஸ்வி திருமண மண்டபம் வீதியைச் சேர்ந்த இந்து இயக்க பிரமுகர் வெள்ளியங்கிரி என்பவரின் சரக்கு ஆட்டோ மீதும் மர்மநபர்கள் டீசல் பாக்கெட்டை வீசி தீ வைக்க முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸார், 2 பிரிவுகளில் தனித்தனியாக 5 வழக்குகள் பதிவு செய்ததோடு, 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர்.

இந்த வழக்குகள் தொடர்பாக கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் தொடர்பாக பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். இதுதொடர்பாக கோவை மாவட்ட காவல்துறையினர் கூறும்போது, ‘‘மேற்கண்ட 5 சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களைப் பிடிக்க250-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. 500-க்கும் மேற்பட்டோரின் செல்போன் அழைப்புகள் ஆய்வுசெய்யப்பட்டு, அதில் சந்தேகத்துக்குரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதன் இறுதியில், பொள்ளாச்சியைச் சேர்ந்த முகமது ரபீக்(26), பொள்ளாச்சி மகாத்மா காந்தி வீதியைச் சேர்ந்த ரமீஸ் ராஜா(36), பொள்ளாச்சி ஷெரீப் காலனியைச் சேர்ந்த மாலிக் என்ற சாதிக் பாஷா(32) ஆகியோர் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிந்தது. இதையடுத்து 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஜவுளிக்கடை நடத்தி வரும் முகமதுரபீக் பிஎஃப்ஐ பொள்ளாச்சி நகர செயலாளராக உள்ளார். மற்றஇருவரும் பிஎஃப்ஐ உறுப்பினர்கள். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்’’ என்றனர். மதுரையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அக்குபஞ்சர் தெரபிஸ்ட் ஒருவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டு: மதுரை மேல அனுப்பானடி பகுதியில் வசிக்கும் ஆர்எஸ்எஸ் நிர்வாகியான கிருஷ்ணனின் வீட்டுக்கு வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது கடந்த 24-ம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இக்காட்சி அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இச்சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மதுரை சம்மட்டிபுரம் உசேன்(33), நெல்பேட்டை சம்சுதீன் (39) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மதுரை மாப்பாளையத்தில் அக்குபஞ்சர் கிளினிக் நடத்தும் அபுதாகிர் (தெரபிஸ்ட்) என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார்.

ஐஎம்எல் அமைப்பினர்: போலீஸார் கூறுகையில், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட உசேன், சம்சுதீன் ஆகியோர் இந்தியமுஸ்லிம் லீக் (ஐஎம்எல்) கட்சியிலும், அக்குபஞ்சர் தெரபிஸ்ட் அபுதாகீர் பாப்புலர் ப்ரன்ட் ஆப்இந்தியா அமைப்பிலும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட இவர்களின் பின்னணி குறித்துதீவிர விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

SCROLL FOR NEXT