சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நடப்பாண்டு மேட்டூர் அணையில் வழக்கத்துக்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வழக்கத்தைவிட அதிகமான ஏக்கரில் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இந்த முறை மேட்டூர் நீர்மட்டம் குறையாமல், தொடர்ந்து 93.4 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. அதனால் குறுவை சாகுபடியை தொடர்ந்து, சம்பா பருவ சாகுபடிநடவு செய்யும் ஆயத்தப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கமாக 12 லட்சம் ஏக்கர்பரப்பளவில் விவசாய பணிகள்மேற்கொள்ளப்படும் நிலையில், இந்த ஆண்டு 14 லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாய பணிகள்அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், விவசாயிகள் எத்தனை ஏக்கரில் விவசாயம் செய்கிறார்களோ, அத்தனை ஏக்கருக்கும் கடன் கொடுக்க வேண்டும். மேலும், விவசாய நிலங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப அரசு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அளவு அனைத்து இடங்களிலும் திறந்து வைக்க வேண்டும்.