மீனவ மக்களின் வாழ்வு இனிதே சிறக்க, வளர, தொடர மீனவர் தின நல்வாழ்த்துக்களை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உலகம் முழுவதும் உள்ள மீனவ மக்கள் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று மீனவர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தியாவிலும் மீனவர்கள் மீனவ தினத்தை தங்கள் வாழ்வில் பொன்னான நாளாக கருதி கொண்டாடுகிறார்கள். இந்நாளில் மீனவர்கள் கடல் அன்னைக்கு மரியாதை செய்து, ஆலயங்களில் வழிபாடு செய்து, விழாவாக கொண்டாடுகின்றனர்.
மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் தங்களின் குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்கள்.
குறிப்பாக தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சினைகளால், அவர்களால் நிம்மதியாக மீன்பிடிக்க முடியவில்லை. மேலும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் படகுகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்துவது, பறிமுதல் செய்வது, மீனவர்களை துன்புறுத்துவது, அச்சுறுத்துவது, கைது செய்வது, சிறையில் அடைப்பது போன்ற பல்வேறு அராஜகச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.
இதற்கு நிரந்தர, சுமுகத் தீர்வு காண மத்திய அரசு அனைத்து நல்ல முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். தமிழக மீனவர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஏற்படுத்தி தர தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற அனைத்துப் பிரச்சினைகளும் நீங்கி, அவர்களின் பாரம்பரிய உரிமைகள் நிலைநாட்டப்பட்டு, மீன்பிடித் தொழில் நிம்மதியாக தொடர வேண்டும்.
எனவே தமிழக மீனவ மக்கள் இனி வரும் காலங்களில் தங்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை தங்கு தடையின்றி, பாதுகாப்பாக தொடர்ந்து தொழிலில் முன்னேற்றம் கண்டு, தங்கள் குடும்பத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இறைவனும், இயற்கையும் அருள் புரிய வேண்டும் என்று வேண்டுகிறேன்.
மேலும் மீனவ மக்களின் வாழ்வு இனிதே சிறக்க, வளர, தொடர என் மனம் நிறைந்த மீனவர் தின வாழ்த்துக்கள்'' என்று வாசன் தெரிவித்துள்ளார்.