தமிழகம்

புதுச்சேரி ரயில் நிலைய பகுதியில் குடியிருப்புகள் இடித்து அகற்றம்: பொதுமக்கள் மறியல்; திமுக எம்எல்ஏ கைது

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரயில்வே நிலையத்துக்கு சொந்தமான இடத்தில் 30 ஆண்டுகளாய் இருந்த 22 குடியிருப்புகள் அகற்றப்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்ட அத்தொகுதி திமுக எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட மக்களும் மறியலில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி ரயில் நிலையத்துக்கு பின்புறம் உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட கீழ்தோப்பில் பகுதியில் 30 ஆண்டுகளாக 20-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இடம் ரயில்வே நிலையத்திற்கு சொந்தமானது. இவ்விடத்தில் வசிப்போருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. புதுச்சேரி ரயில் நிலையத்தை தேசிய அளவில் நவீனப்படுத்தப்படும் என ரயில்வே துறை வாரிய தலைவர் அறிவித்திருந்தார். அதன்படி புதுச்சேரி ரயில் நிலையத்தை 15 நாட்களுக்குள் பணி தொடங்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள ரயில் நிலையத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகளை, தெற்கு ரயில்வே உதவி பாதுகாப்பு ஆணையர் சின்னதுரை, தலைமை மண்டல பொறியியலாளர், கார்த்திக்கேயன் தலைமையில் வீடுகளை அகற்ற வந்தனர். இன்று குடியிருப்புகளை அகற்றும் பணியில் இறங்கினர். வீடுகளில் இருந்து வெளியேற ஒலிபெருக்கியில் அறிவுறுத்தினர். அதையடுத்து அங்கிருந்தோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 10 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இக்குடியிருப்புகள் இடிக்கத் தொடங்கினர். அப்போது, கால அவகாசம் கேட்டு அத்தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். முதல்வருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் பேசினார்.

ரயில்வே அதிகாரிகளிடம் முதல்வர்பேசுவதாக குறிப்பிட்டு செல்போனை தரக் கூறினார். ஆனால், ரயில்வே அதிகாரிகள் வாங்க மறுத்து விட்டனர். ஆனால், ரயில்வே அதிகாரிகள் 22 குடியிருப்புகளையும் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்ட அன்பால் கென்னடி எம்எல்ஏவை போலீஸார் கைது செய்து ஒதியன்சாலை காவல் நிலையம் அழைத்து வந்தனர். இத்தகவல் அறிந்து திமுக அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, சட்டமன்ற உறுப்பினர் சம்பத் ஆகியோர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.

அங்கு எதிர்க்கட்சித்தலைவர் சிவா கூறுகையில், "ரயில்வே இடத்திலிருந்து காலி செய்வதற்கு பொதுமக்களும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். கால அவகாசம் மட்டுமே கேட்கப்பட்டது. ஆனால் காவல் துறையும் ரயில்வே துறையும் அவசர அவசரமாக காலி செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது இந்த ஒரு பகுதியில் மட்டுமல்ல புதுச்சேரி முழுவதும் இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என அச்சம் எழுந்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் புதுச்சேரியில் நடக்கிறதா அல்லது எமர்ஜென்சி நடக்கிறதா என தெரியவில்லை. புதுச்சேரியில் மினி எமர்ஜென்சி நடப்பது போல் இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு நியாயம் கிடைக்கும் வரை சட்டப்பேரவை உறுப்பினர் காவல் நிலையத்திலிருந்து வெளியேற மாட்டார்" என்று குறிப்பிட்டனர்.

இதனிடையே, காவல் நிலையத்திற்கு வந்த பாதிக்கப்பட்ட மக்கள் அண்ணா சாலையில் அண்ணா சிலை முன் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

SCROLL FOR NEXT