தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழகம்

தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கையை பிற மாநிலங்கள் நடைமுறைப்படுத்த ஆவல்: முதல்வர் பெருமிதம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகளை பிற மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்த துடிப்புடன் உள்ளன என்று கனடாவில் நடைபெறும் சர்வதேச மனிதநேய சமூகநீதி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

பெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா மற்றும் கனடா மனிதநேய அமைப்புகள் இணைந்து 3-வது சர்வதேச மனிதநேய சமூக நீதி மாநாட்டை கனடாவில் நடத்தின. இந்த மாநாட்டில், திராவிடர் கழக தலைவர் வீரமணி காணொலி வாயிலாக தொடக்க உரையாற்றினார். அதைத் தொடர்ந்து, மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பேசியதாவது:

கடந்த செப்.17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாளை மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய வளைகுடா நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என உலகின் பல நாடுகள் கொண்டாடியுள்ளன. இதுபோன்ற மாநாடுகள் தொடர்ந்தால் உலகம் முழுவதும் பெரியார் கொண்டாடப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. பெரியாரின் ஒளி நம்மை இணைக்கிறது.

இம்மாநாடு மனிதநேய சமூக நீதி மாநாடாக கூட்டப்பட்டுள்ளது. மனிதநேயத்தின் அடிப்படையே சமூக நீதிதான். சமூக நீதி கருத்தியலே மனித நேயத்தின் அடிப்படையி்லதான் உருவாகியுள்ளது. தமிழகத்தில் பிறந்து தமிழில் திருக்குறளை தீட்டியிருந்தாலும், வள்ளுவரின் குறள்கள் உலகில் 125 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப் பொதுமறையாக உயர்ந்து நிற்கிறது.

அதேபோல, தமிழகத்தில் பிறந்து, தமிழில் பரப்புரை செய்தாலும், உலக சிந்தனையாளராக போற்றப்படுகிறார் பெரியார். அவரது நூல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பெரியார் சிந்தனைகள்

திருவள்ளுவரின் குறளையும், பெரியாரின் சிந்தனைகளையும் உலகளவில் கொண்டு செல்வதன் மூலம், மனிதநேய, சமூக நீதி, சமநீதி, சமத்துவ உலகத்தை உருவாக்க முடியும். பெரியார் வாழ்ந்த காலத்திலேயே உலகளவில் பல நாடுகளுக்குச் சென்று பகுத்தறிவு கருத்துகளை பேசியவர். அப்போதே ஆதரவு வட்டத்தை அந்த நாடுகளில் உருவாக்கியவர். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரின் பேராற்றலை உலகம் உணர்ந்துவிட்டது.

பெரியாரின் பெருந்தொண்டர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழித்தடத்தில் தான் ஆட்சி நடத்தி வருகிறேன். அதற்கு திராவிட மாடல் என்று பெயர் சூட்டியுள்ளேன்.

தமிழ்மொழி அறிவு

திராவிட மாடல் ஆட்சியின் மையக் கொள்கை மனித நேயமும், சமூக நீதியும்தான். அனைத்து இடங்களிலும் சமூக நீதியை நிலைநாட்டியுள்ளோம். பெண்களுக்கு இலவச போக்குவரத்து பயண வசதி, தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடல், வேலைவாய்ப்பை அடைய தமிழ்மொழி அறிவு, இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், உயர்கல்வி பெறும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், அனைத்து தொழில் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு என எண்ணற்ற திராவிட மாடல் திட்டங்களை தீட்டி தமிழகத்தை வளப்படுத்துகிறோம்.

பிற மாநில அரசுகள் தமிழகத்தின் திராவிட மாடல் கொள்கை, கோட்பாடுகளை அறிய ஆர்வமாக உள்ளன. தங்கள் மாநிலத்திலும் அவற்றை நடைமுறைப்படுத்த துடிப்புடன் உள்ளன. இவ்வாறு முதல்வர் பேசினார்.

SCROLL FOR NEXT