சென்னையில் உள்ள வங்கிக் கிளைகளில் புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளைப் பெற 2 மணி நேரத்துக்கும் அதிகமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டது.
தற்போது புழக்கத்தில் உள்ள 1,000, 500 ரூபாய் நோட்டுகள் நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 10-ம் தேதி முதல் பழைய 1,000, 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் அனைத்து வங்கிக் கிளைகளிலும் பெற்றுக் கொள்ள லாம் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை மாநகர், புறநகரில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளிலும் புதிய ரூபாய் நோட்டுகளைப் பெற காலை 7 மணி முதல் மக்கள் குவியத் தொடங்கினர். நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள சூளைமேடு இந்தியன் வங்கிக் கிளையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கும், தங்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்துவதற்கும் வாடிக்கை யாளர்கள் குவிந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த ஏராளமான காவலர் கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
வரிசையில் நின்றிருந்த வர்களிடம் ஆங்கிலத்தில் அச்சிடப் பட்ட படிவத்தை வங்கி ஊழியர்கள் வழங்கினர். படிவத்தைப் பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகலை, ரூபாய் நோட்டுகளுடன் சேர்த்து வழங்கினால், பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிதாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன.
ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல வங்கிக் கிளைகளில் ரூ.2 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டது. இது குறித்து இந்தியன் வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘புதிய ரூபாய் நோட்டுகள் குறைந்த அளவிலேயே உள்ளன. நீண்ட வரிசையில் காத்திருப்பவர்கள் அனைவருக்கும் அவை கிடைக்க வேண்டும் என்பதால் ரூ. 2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. டிசம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் மக்கள் பீதியடைய தேவையில்லை’’ என்றார்.
புரசைவாக்கம் நெடுஞ்சாலை யில் உள்ள இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதியது. காசா மேஜர் சாலையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்ப்பரேஷன் வங்கியில் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சேத்துப்பட்டு இந்தியன் வங்கிக் கிளையில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கி வந்த தம்பதியிடம் பேசியபோது, ‘‘காலை 10 மணிக்கு வந்தோம். புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்க 11.30 மணி ஆகிவிட்டது’’ என்றனர். புரசைவாக்கம், சேத்துப்பட்டில் உள்ள வங்கிக் கிளைகளில் கூட்டத் துக்கு ஏற்ப கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் வாடிக்கையாளர்கள் நீண்டநேரம் காத்திருக்க நேரிட்டது.
கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் வாடிக் கையாளர்கள் பத்துப் பத்து பேராக அனுமதிக்கப்பட்டனர். இங்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் வழங் கப்படவில்லை. 100, 50, 10, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கள் வழங்கப்பட்டன. கூட்டம் அதிகரித்ததால் தள்ளு முள்ளு ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் வெளியே காத்திருந்த வாடிக்கையாளர்களிடம் “அனை வருக்கும் பணம் மாற்றி கொடுக் கப்படும். கவலை வேண்டாம். வரிசையாக வந்தால் விரைவில் பணி முடிந்து விடும்’’ என உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து அமைதி நிலவியது.
திருவான்மியூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கிளையில் கூட்டம் குறைவாக இருந்தது. அடையாள அட்டைகளை வங்கி ஊழியர்களே வாடிக்கையாளர்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து கொடுத்தனர்.
தாம்பரம் - வேளச்சேரி சாலை யில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி யின் சேலையூர் கிளையில் கூட்டம் அதிகமாக இருந்தது. உள்ளே நுழையும் போதே, வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களை நிறுத்தி, தேவை அறிந்து அதன்படி வழிகாட்டினார்.
ஆனால், தாம்பரம் பாரத மாதா சாலையில் உள்ள அதே வங்கியின் கிழக்குத் தாம்பரம் கிளையில் கூட்டத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் இருந்த போலீஸாரே, பணம் பரிமாற்றம், டெபாசிட்டுக்கான படிவங்களை வழங்கினார். கணக்கு வைத் திருக்கும் வங்கிக் கிளையில் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என கூறியதால் வாடிக்கை யாளர்கள் புலம்பியபடி சென்றதை பார்க்க முடிந்தது. இங்கு 10 மற்றும் 100 ரூபாய் நோட்டுகளே அதிகம் வழங்கப்பட்டன.
தலைமைச் செயலகத்தில்..
தலைமைச் செயலக வளாகத் தில் உள்ள சிண்டிகேட் வங்கியில் ஆயிரம் ரூபாய் அளவுக்கு மட்டுமே ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப்பட்டன. இந்தி யன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.2 ஆயிரம் அளவுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொள் ளப்பட்டதால், அங்கு தலைமைச் செயலக ஊழியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றுச் சென்றனர்.
பல வங்கி கிளைகளில் ஆங்கில படிவத்தை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் தடுமாறினர். இதனால், அருகில் உள்ளவர்களின் உதவியை நாடினர். பல மணி நேரம் காத்திருந்த மக்கள் குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதி இல்லாததால் பெரும் சிரமத் துக்கு ஆளானார்கள்.