ராமநாதபுரம்: தமிழகத்தில் பாஜக பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது என்று மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை இணை அமைச்சா் பானு பிரதாப் சிங் வா்மா தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் நடந்த பாஜக ஓபிசி அணி நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவது குறித்து மத்திய அரசு சார்பாக தமிழக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
என்ஐஏ சோதனை தமிழகத்தில் மட்டும் நடைபெறவில்லை. பல மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. தேசத்துக்கு விரோதமாக யார் நடந்து கொள்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக ராமநாதபுரம் பாஜக ஆதரவாளரும், அரசு மருத்துவருமான மனோஜ்குமார் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் மீது மர்ம நபர்கள் செப்.24-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தாக்குதல் நடந்த மருத்துவர் மனோஜ்குமார் வீட்டுக்கு சென்று அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா ஆறுதல் தெரிவித்தார்.