தமிழகம்

பிரபல தொழிலதிபர் வேணு சீனிவாசனின் தாயார் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல தொழிலதிபரும், டிவிஎஸ் குழும தலைவருமான வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா சீனிவாசன் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழக வைணவ பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் பிரேமா சீனிவாசன். பிரபல தொழிலதிபரும், டிவிஎஸ் குழும நிறுவனருமான டி.எஸ்.சீனிவாசன் அவரது கணவராவார். வயது முதிர்வு காரணமாக பிரேமா சீனிவாசன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு டிவிஎஸ் குழுமத்தில் தலைமை பொறுப்புகளை வகிக்கும் வேணு சீனிவாசன், கோபால் சீனிவாசன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

மறைந்த பிரேமா சீனிவாசன், இல்லற வாழ்வில் நுழைந்த பிறகும் கலை, இசை போன்றவற்றுடன் இணைந்தே பயணித்தார். அவர் தனது வாழ்வில் தத்துவம், இசை கற்றல், கலை, தோட்டங்கள் அமைத்தல், சைவ உணவு வகைகள் தயாரிப்பு போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். பாரம்பரிய கைவினை பொருட்கள் மட்டுமின்றி, துணி, ஆடைகள், நகைகள், வெள்ளிப் பொருட்கள் வடிவமைப்பாளராகவும் திகழ்ந்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். மெட்ராஸ் சுற்றுச்சூழல் சங்கத்தை தொடங்கி சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளில் தொழிற்சாலைகளால் ஆறுகள் மாசுபடுவதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்று வடிநிலப் பகுதியில் காடு வளர்ப்பு திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார். அழிந்து வரும் உள்நாட்டு தாவரங்களையும், மரங்களையும் வளர்ப்பதில் அவர் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த பிரேமா சீனிவாசனின் உடல், அடையாறு கிளப் கேட் சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

முதல்வர் இரங்கல்: இவரது மறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், "டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் தாயார் பிரேமா சீனிவாசன் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். போற்றி வளர்த்த அன்னையை இழந்து தவிக்கும் வேணு சீனிவாசன் மற்றும் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT