ஜல்லிக்கட்டு தடையை நீக்க சட்டம் இயற்ற வேண்டும். பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி. மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூரில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜல்லிக்கட்டு, மாடுபிடி, ரேக்ளாரேஸ் ஆர்வலர்கள் சார்பில் அவனியாபுரத்தில் நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எம். சேதுராமு தலைமை வகித்தார். அவனியாபுரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பால்ச்சாமி முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தர்ணாவை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமுஎகச மாநில பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் பேசியது: ஜல்லிக்கட்டை தடுக்க கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி செய்து, நீதிமன்றத் தடை என்ற பெயரில் 4 ஆண்டுகளாக போட்டிகளை நடக்க விடாமல் செய்துவிட்டனர். தமிழகத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு என்பது காளைகளை அடையாளப்படுத்துவது இல்லை. வீரர்களை அடையாளப்படுத்துவது. கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குதிரைப் பந்தயம் இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது வதையில்லையா? நாளொன்றுக்கு 60 கி.மீ. நடக்க வேண்டிய யானையை, கோயிலில் வைத்து சுற்ற விடுகிறார்கள். அது வதையில்லையா? காளைகளை பாதுகாப்பது என்றால், நிகழ்ச்சியை பாதுகாப்போடு நடத்த ஆலோசனை வழங்கி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும். மாறாக தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சியையே தடை செய்வது எப்படி சரியாகும்.
பொங்கல் பண்டிகையின் போது 3 முதல் 4 நாட்கள் மட்டுமே பயன்படுத்தும் காளையை, ஆண்டு முழுவதும் குடும்ப உறுப்பினர் போலவே நடத்துகின்றனர். கடந்த ஆண்டு தேர்தல் நேரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் என அறிவித்தார்கள். மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டது, மத்திய அமைச்சர்களுக்கு இது கூடவா தெரியாது. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும். காட்சிப்படுத்தக்கூடாது என்ற பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடரும் என் றார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. விஜயராஜன், மதசார்பற்ற ஜனதாதளம் மாநில பொதுச் செயலாளர் க. ஜான்மோசஸ், மதிமுக தெற்கு மாவட்டச் செயலாளர் ஏ.கதிரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.
கொங்கு இளைஞர் பேரவை சார்பில் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே நேற்று தர்ணா நடைபெற்றது. மாவட்ட தலைவர் பார்த்தீபன் தலைமை வகித்தார். இளைஞரணி செயலர் பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜவஹர், செய்தி தொடர்பாளர் மருதுபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத் தினர்.
இதையடுத்து சமயநல்லூர் டிஎஸ்பி வனிதா, அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அன்னராஜ் உள்ளிட் டோர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.