தமிழகம்

ஈரோடு பாஜக பிரமுகரின் கடையில் டீசல் குண்டு வீச்சு: எஸ்டிபிஐ உறுப்பினர் உட்பட 4 பேர் கைது

செய்திப்பிரிவு

ஈரோட்டில் பாஜக பிரமுகருக்குச் சொந்தமான பர்னிச்சர் கடையில், டீசல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஈரோடு மூலப்பாளையம் பகுதியில் பாஜக பிரமுகரான தட்சிணாமூர்த்தி என்பவர், பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், கடந்த 22-ம் தேதி இரவு, டீசல் நிரப்பப்பட்ட பாலிதீன் கவர்களை மர்ம நபர்கள் வீசிவிட்டு தப்பினர்.

இதில் ஒரு பாக்கெட் மட்டும் கடை அலுவலக ஜன்னல் கம்பிகள் மீது பட்டு, தீப்பிடித்தது. பெரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த வழக்கில், ஈரோடு பிராமண பெரிய அக்ரஹார பகுதியைச் சேர்ந்த கலில்ரகுமான் (27), கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (25), இந்திரா நகரைச் சேர்ந்த சாதிக் (27), இவரது தம்பி ஆசிக் அலி (23) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இதில், சதாம் உசேன் மட்டும் எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார். கடந்த வாரம், பிஎப்ஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாஜக பிரமுகர் தட்சிணாமூர்த்தியின் கடை மீது டீசல் பாக்கெட்டுகள் வீசப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SCROLL FOR NEXT