சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்தில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இங்குள்ள மிகவும் முக்கியமான தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த செப்.23-ம் தேதி நடைபெற்றது.
இதில், ஏற்கெனவே தலைவராக உள்ள பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் வின்னர் அணியும், நிதித்துறை துணைச் செயலர் வெங்கடேசன் தலைமையில் அகரம் அணியும், பொதுத்துறை சார்பு செயலர் தமிழ்ஜோதி தலைமையில் ‘தி டீம்’ அணியும், பொதுப்பணித் துறை உதவி பிரிவு அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் ‘அச்சீவர்ஸ்’ அணியும் போட்டியிட்டன.
வாக்குப்பதிவு நடைபெற்றஅன்றே வாக்கு எண்ணிக்கைமுடித்து முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதித்துறை துணைச் செயலரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான கு.வெங்கடேசன் தலைமையிலான அகரம் அணி வெற்றி பெற்றது.
செயலாளராக சட்டப்பேரவை உதவி பிரிவு அலுவலர் சு.ஹரிசங்கர், இணைச்செயலாளர்களாக நகராட்சி நிர்வாகத்துறை உதவி பிரிவு அலுவலர் இரா.லெனின், உள்துறை உதவி பிரிவு அலுவலர் அ.ஜீவன், பொருளாளராக வணிகவரி மற்றும் பதிவுத்துறை பிரிவு அலுவலர் சே.பிரபா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.