காவல் ஆணையர் செந்தில்குமார் 
தமிழகம்

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: மதுரையில் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கிருஷ்ணன் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் சிசிவிடி பதிவுகளின் அடிப்படையில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தொடர்புடைய மதுரை சம்மட்டிபுரம் உசேன், நெல்பேட்டை சம்சுதீன் ஆகியோர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் இவர்களை கைது செய்த போலீஸாரை காவல் ஆணையர் பாராட்டினார்.

இதற்கிடையே, செப்.22-ல் கோரிப்பாளையத்தில் என்ஐஏ அதிகாரிகளின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் பணியிலிருந்த சிறப்பு புலனாய்வு (ஒசிஐயூ) பிரிவு காவலர் துரைமுருகனை ஆபாசமாக திட்டி, தாக்கியதாக மேலூரைச் சேர்ந்த ஷேக் அலாவுதீன் நேற்று கைது செய்யப்பட்டார்.

காவல் ஆணையர் கூறுகையில், மதுரை நகரிலுள்ள பெட்ரோல் பங்குகளில் பாட்டில், கேன்களில் டீசல், பெட்ரோல் விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்தந்த காவல் நிலைய போலீஸார் இதைக் கண்காணிக்க வேண்டும், என்றார். துணை ஆணையர்கள் மோகன்ராஜ், சீனிவாச பெருமாள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT