தேசிய உறுப்பு தான வாரத்தையொட்டி, உடல் உறுப்புகளை தானம் செய்தவர் களின் குடும்பத்தினருக்கு சென்னை சிம்ஸ் மருத்துவமனை விருது வழங்கி கவுரவித்தது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 முதல் 27-ம் தேதி வரை தேசிய உடல் உறுப்பு தான வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, உடல் உறுப்புகளை தானம் வழங்கியவர்களின் குடும்பத் தினரை கவுரவித்து, விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் நேற்று நடைபெற் றது. மூளைச்சாவு ஏற்பட்டு உறுப்பு தானம் செய்த சென்னை பெரும்பாக்கம் முத்துக்குமரன், செங்கல்பட்டு தியாக மணி, கடலூர் தமிழ்ச்செல்வன், ஆந்திரா கடப்பா துரைசாமி, கிண்டி எல்.மோகன், மதுராந்தகம் நடராஜன், திருவண்ணா மலை ஏ.எஸ்.ஏழுமலை, தேவகோட்டை செந்தில்குமார், முகப்பேர் சுதர்சன், காரைக்கால் ஜான் பெர்னாண்டஸ், கோயம்பேடு சரஸ்வதி ஆகியோரின் குடும்பத்தினருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மருத் துவக் கல்லூரியின் ரத்தக்குழாய் அறுவை சிகிச்சைப்பிரிவு முன்னாள் இயக்கு நரும், தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளரு மான டாக்டர் அமலோற்பவநாதன் பேசியதாவது:
உறுப்பு தானம் செய்வது என்பது ஒரு தியாகச்செயல். தானமாக அளிக்கப்படும் கண், சிறுநீரகம், இதயம், கல்லீரல் ஆகியவற்றுக்கு விலையே நிர்ணயிக்க முடியாது. துயரமான ஒரு சூழலில்தான் உறுப்பு தானம் குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. யாருக்கும் மூளைச்சாவு ஏற்படக்கூடாது என்று நான் வேண்டுகிறேன். மூளைச்சாவு ஏற்படாமல் இருக்க முதலில் சாலை விபத்துகளை ஒழிக்க வேண்டும். அதையும் மீறி மூளைச்சாவுகள் ஏற்படும்போது உறுப்பு தானம் செய்ய வேண்டிய சூழல் எழுகிறது.
உறுப்பு தானம் செய்யப்படும்போது கொடையாளிகள் காலங்காலமாக மற்ற வர்களின் உடலில் வாழ்ந்து கொண்டிருப் பார்கள். உடல் உறுப்பு தானம் சோகத் திலும் ஒரு மனதிருப்தியை அளிக்கும். உலகத்திலேயே உன்னதமான தானம் உறுப்பு தானம்தான். உறுப்பு தானம் வழங்கியவர்களின் குடும்பத்தினரை நன்றியோடு நினைவுகூர்வதற்காகவே தேசிய உறுப்புதான தினம் அனுசரிக் கப்படுகிறது.
இவ்வாறு டாக்டர் அமலோற்பவநாதன் பேசினார்.
தேசிய உடல் உறுப்பு தான கூட்டமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் கருணாகரன் பேசும்போது, “உறுப்பு தானம் என்பது கடினமான சூழலில் எடுக்கப்படும் ஒரு முடிவு.இந்தியாவிலேயே தமிழகம்தான் உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் வகிக்கிறது. உறுப்பு தானத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையம் இயங்குகிறது. இதன்மூலம் வெளிப்படையான முறை யில் உறுப்புகள் தானமாக கொடுக்கப் படுகின்றன” என்றார்.
சிம்ஸ் மருத்துவமனை மருத்துவப் பிரிவு துணைத்தலைவர் டாக்டர் ராஜு சிவசாமி, டாக்டர்கள் கருணாகரன், அமலோற்பவநாதன், ராஜசேகர், ராம் பிரபாகர், விஜயகுமார் ஆகியோர் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு விருது வழங்கி கவுரவித்தனர்.
கவுரவிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னையைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் பேசும்போது, “உறுப்பு தானம் வழங்கியவர்களின் சமூக, பொருளாதார நிலையை அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவர்களின் தேவையை கருத்தில்கொண்டு முடிந்தால் அரசு வேலைவாய்ப்பு வழங்கலாம் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.
முன்னதாக உடல் உறுப்பு தானத்தின் அவசியம் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து மோகன் பவுண்டேஷன் இயக்குநர் டாக்டர் சுமனா நவீன் எடுத்துரைத்தார்.